பொதுமுடக்கத்தை நெகிழ்த்தும் திட்டத்தை கைவிடவேண்டிய நிலைமை? கொரோனாவுடன் நடமாடும் பிரித்தானியர் ஒருவரால் பரவும் அச்சம்
தனக்கு பிரேசில் வகை கொரோனா தொற்று உள்ளது என்பது தெரியாமல் ஒரு பிரித்தானியர் நடமாடுவதால், மீண்டும் பிரித்தானியாவில் கொரோனா பரவல் ஏற்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அந்த நபரை தேடும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள்.
ஆனால், பிரச்சினை என்னவென்றால், அந்த நபர் யார், அவருக்கு எங்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அவர் தற்போது எங்கே இருக்கிறார் என எந்த விடயமும் யாருக்கும் தெரியாது.
பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட திடீர் மாற்றம் பெற்ற வகை கொரோனா வைரஸ் தொற்று, பிரித்தானியாவில் ஆறு பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் மூன்று பேர் இங்கிலாந்திலும் மூன்று பேர் ஸ்காட்லாந்திலும் உள்ளார்கள்.
அதில், இங்கிலாந்தில் பிரேசில் கொரோனா தொற்றிய இரண்டுபேர் South Gloucestershire என்ற இடத்தில் உள்ளார்கள்.
ஆனால், அந்த மூன்றாவது நபர் தன்னைக் குறித்த விவரங்களை முறைப்படி ஆவணத்தில் நிரப்பாததால், அவர் எக்கே இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
அந்த பிரேசில் வகை வைரஸ் ஏற்கனவே உடலில் உருவான ஆன்டிபாடிகளை பாதிக்கும் என்பதால், தற்போது போடப்பட்டுவரும் தடுப்பூசிகளின் செயல்திறன் கேள்விக்குறியாகிறது.
ஆகவே, தடுப்பூசிகள் துறை அமைச்சரான Nadhim Zahawi, பிப்ரவரி மாதம் 12 அல்லது 13ஆம் திகதி கொரோனா பரிசோதனை செய்துகொண்டவர்களில் இன்னும் இதுவரை சோதனை முடிவை பெற்றுக்கொள்ளாதவர்கள் அல்லது தங்களைக் குறித்து முன்பதிவு ஆவணத்தில் முழுமையாக தெரிவிக்காதவர்கள் உடனடியாக அரசிடம் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரச்சினை என்னவென்றால், பாதிக்கப்பட்ட அந்த நபருக்கே தனக்கு கொரோனா தொற்றியுள்ளது தெரியாமல் கூட இருக்கலாம்.
இந்நிலையில், அந்த பிரேசில் வகை கொரோனா வைரஸ் பிரித்தானியாவில் பரவத்தொடங்குமானால், பொதுமுடக்கத்தை நெகிழ்த்த அரசு செய்துவரும் முயற்சிகள் மேலும் தாமதாகும் என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளார்கள்.

