விஸ்வரூபமெடுத்த பாகிஸ்தான் அணி! அதிவேக சதமடித்த வீரர்..16 ஓவரிலேயே 207 இலக்கை எட்டி மிரட்டல்
நியூசிலாந்திற்கு எதிரான 3வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
ருத்ர தாண்டவமாடிய சாப்மேன்
ஆக்லாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணியில் மார்க் சாப்மேன் ருத்ர தாண்டவம் ஆடினார். சதத்தை நெருங்கிய அவரை ஷாஹீன் அப்ரிடி தனது பந்துவீச்சில் வீழ்த்தினார். 44 பந்துகளை எதிர்கொண்ட சாப்மேன் 4 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 94 ஓட்டங்கள் குவித்தார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய, அணித்தலைவர் மைக்கேல் பிரேஸ்வெல் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசினார்.
நியூசிலாந்து 19.5 ஓவர்களில் 204 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. ஹாரிஸ் ராப் 3 விக்கெட்டுகளும், அப்ரிடி, அப்ரார் மற்றும் அப்பாஸ் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் இருவரும் நியூசிலாந்தின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். ஹாரிஸ் 20 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 41 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டுஃபி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
ஹசன் நவாஸ் முதல் சதம்
அடுத்து களமிறங்கிய சல்மான் அஹாவும் அதிரடி ஆட்டத்தில் மிரட்டினார். மறுமுனையில் சிக்ஸர் மழை பொழிந்த ஹசன் நவாஸ் (Hasan Nawaz) 44 பந்துகளில் சதம் அடித்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக சதம் அடித்த பாகிஸ்தான் வீரர் எனும் பாபர் அசாமின் (49) சாதனையை தகர்த்தார்.
சல்மான் அஹா அரைசதம் அடிக்க, பாகிஸ்தான் அணி 16 ஓவர்களிலேயே 207 ஓட்டங்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
ஹசன் நவாஸ் 45 பந்துகளில் 7 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 105 ஓட்டங்களும், சல்மான் அஹா 31 பந்துகளில் 2 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளுக்கு பின் மிரட்டலாக வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது போட்டி 23ஆம் திகதி பே ஓவல் மைதானத்தில் நடக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |