நிறைய தவறுகளை செய்தோம், ஆனால் எங்கள் இலக்கு.. இலங்கை வீரர் ஹசரங்கா
நிறைய தவறுகளை செய்தாலும், அடுத்த ஆட்டத்தில் வெற்றிப்பாதைக்கு திரும்புவோம் என இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டி20 போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததன் மூலம் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்தது. அந்த போட்டியில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி, துடுப்பாட்டத்தில் மோசமாக சொதப்பியது.
125 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணியை, இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்கா சிறப்பான பந்துவீச்சின் மூலம் திணறடித்தார். அவர் 4 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்த நிலையில் தொடரை இழந்தது குறித்து ஹசரங்கா கூறுகையில், 'நானும் தீக்ஷனாவும் ஆடுகளம் நன்றாக சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்ததால், 125 ஓட்டங்கள் எடுத்தால் கூட விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆட்டத்தை மாற்ற முடியும் என்று நினைத்தோம். ஆனால், எங்கள் அணி கூடுதலாக 15 அல்லது 20 ஓட்டங்கள் எடுக்க தவறியதால் தோல்வியுற்றோம்.
பந்துவீச்சாளர்கள் என்ற முறையில், துடுப்பாட்ட வீரர்கள் அடிக்கும் ஓட்டங்களை எப்படியாவது காக்க வேண்டும். எனினும், துடுப்பாட்டத்தில் மேலும் 10 சதவிதம் வலு சேர்த்தால் அடுத்தடுத்த போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். துடுப்பாட்டத்தில் நாங்கள் நிறைய தவறுகளை செய்தோம்.
ஒரு குழுவாக நாங்கள் அந்த குறையை ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அடுத்த ஆட்டத்தில் எப்படியாவது வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என நாங்கள் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்' என தெரிவித்துள்ளார்.
Photo Credit: AFP
மேலும் உலகக்கோப்பை குறித்து அவர் கூறும்போது, 'உலகக்கோப்பை நெருங்கி வருவதால் துடுப்பாட்டம் மற்றும் பந்துவீச்சு இரண்டையும் ஒரே நிலைக்கு கொண்டு வந்தால், ஒரு அணியாக செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பந்துவீச்சை பொறுத்தவரை இம்முறை நாங்கள் சிறப்பாக உள்ளோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் ஆட்டத்திற்கு ஆட்டம் கற்றுக் கொள்கிறார்கள். உலகக்கோப்பைக்கு ஒரு அணியாக நன்றாக தயார் செய்வதே எங்கள் இலக்கு' என தெரிவித்துள்ளார்.