உடல்நிலை சரி இல்லை என்றதும் இன்டர்நெட்டை நோக்கி ஓடுகிறீர்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்
உடல்நிலை சரி இல்லை என்றதும் இன்டர்நெட்டை நோக்கி ஓடுபவரா நீங்கள்?
இணையம் உங்கள் மருத்துவர் அல்ல என்பதை மறந்துவிடவேண்டாம்.
உங்கள் சொந்த நாட்டை விட்டுவிட்டு வேறொரு நாட்டுக்கு வந்திருக்கிறீர்கள். உடல் நிலை சரியில்லை என்றதுமே மருத்துவரிடம் செல்லாமல் இணையத்தைத் தேடி ஓடுகிறீர்களா?
அப்படியானால், இந்த செய்தி உங்களுக்காகத்தான்.
ஆம், எல்லா பிரச்சினைகளுக்கும் இணையத்தைத் தேடுவதிலேயே பல பிரச்சினைகள் உள்ளன.
கால் விரல் கொஞ்சம் வீங்கியிருக்கிறது, தொண்டையில் ஏதோ கரகரப்பு அல்லது அடிக்கடி தலைவலி. உடனே நம்மில் பலர் என்ன செய்கிறோம்?
உடனே நம் உடலில் தோன்றியிருக்கும் அறிகுறிகளை நம் கணினியிலோ, ஸ்மார்ட்போனிலோ டைப் செய்துவிட்டு, இணையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
ஒரு பொத்தானை கிளிக் செய்ததும், இணையத்தில் பதில் வந்துவிடும்.
ஒன்றில், எடுத்த உடனேயே, உங்களுக்கு புற்றுநோய் என்று ஒரு பதில் வந்து கலங்கவைக்கும், அல்லது, உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை சாதாரணமான ஒன்றுதான் என்று ஒரு பதில் வரும்.
அப்படித்தான் ஒரு தந்தை தன் மகளுடைய தோலில் ஏற்பட்டுள்ள சிவப்புப் புள்ளிகளைக் கண்டதும் இணையத்தில் ஆராய்ச்சி செய்துவிட்டு, அதில் வந்த பதிலைக் கண்டதும் உடனே மருத்துவமனைக்குச் சென்று என் மகளுக்கு MRI ஸ்கேன் எடுத்தே ஆகவேண்டும் என வற்புறுத்தினார். கடைசியில் பார்த்தால், அந்த சிவப்பு நிறம் அந்த சிறுமியின் ஆடையிலிருந்து அவளுடைய உடலில் ஒட்டியிருந்தது தெரியவந்தது.
ஒரு பெண் இருந்தார், அவரும் தனக்குரிய அறிகுறிகளை இணையத்தில் பதிவிட்டு தனக்கு என்ன பிரச்சினை என தேடினார். அவருக்கு பிரசவ வலி வந்திருக்கிறது என்றது இணையம். அவர் கர்ப்பிணியே அல்ல!
ஒரு ஆண் தனக்கு இருக்கும் பிரச்சினைகளுக்குக் காரணம் என்ன என்று தேடினார். அவருக்குக் கிடைத்த பதில், உங்களுக்கு கர்ப்பகால நீரிழிவு பிரச்சினை என்பது!
இதெல்லாம் படிப்பதற்கு நகைச்சுவையாக தோன்றினாலும், இணையம் வாயிலாக நமக்கு என்ன நோய் என்று தேடுவதில் நிஜமாகவே சில அபாயங்கள் உள்ளன.
கோவிட் காலகட்டத்தில் நேரடியாக மருத்துவமனைக்கு செல்லும் வாய்ப்பு குறைவு என்பதால், பல மருத்துவர்களே மக்களிடம் இணையத்தில் தேடி தங்களுக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளனவா என்று பார்க்கும்படி ஆலோசனை கூறிய நிகழ்வுகள் நடக்கத்தான் செய்தன.
ஆனாலும், நமக்கு இருக்கும் அறிகுறிகளை வைத்து, மருத்துவரிடம் செல்லாமல், இணையத்தில் தேடி நமக்கு என்ன பிரச்சினையாக இருக்கலாம் என முடிவு செய்வதில் மூன்று வகையான பிரச்சினைகள் உள்ளன.
ஒன்று, நீங்களே உங்களுக்கு என்ன பிரச்சினை என முடிவு செய்து, நீங்களே மருந்து எடுத்துக்கொள்வீர்கள். அது மிகவும் ஆபத்தான ஒன்றாகும்.
இரண்டு, உண்மையில் உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சினை. ஆனால், இணையம் உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்கிறது. நீங்கள் உடனடியாக முறையான சிகிச்சை எடுக்கவில்லை. அதுவும் ஆபத்துதான்.
மூன்றாவது பிரச்சினை என்னவென்றால், உங்களுக்கு சின்ன ஒரு பிரச்சினை ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால், இணையத்தில் கூறப்பட்ட விடயத்தை உண்மை என்று நம்பி, உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்சினை என்று பயந்து நீங்கள் கவலைக்கும் மன அழுத்தத்திற்கும் ஆளாகக்கூடும். அது ‘cyberchondria’ என்றே அழைக்கப்படுகிறது.
சமீபத்தில், ஆசியா மற்றும் ஐரோப்பாவில் வாழும் 11,000 பேரிடம் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 13.5 சதவிகிதத்தினர் வெளிநாடுகளில் வாழ்பவர்கள்!
தங்கள் வீட்டை விட்டு தூரமாக வேறொரு நாட்டில் வாழும் இந்த மக்களில் பலர், தங்களுக்கு மன அழுத்தம் மற்றும் anxiety என்னும் பிரச்சினைகள் இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்தார்கள். உண்மையில், அது அவர்களாகவே இணையத்தைப் பார்த்து தங்களுக்கு அந்த பிரச்சினைகள் இருப்பதாக எண்ணிக்கொண்டது.
ஆக, எல்லா பிரச்சினைகளுக்கும் இணையத்தை நம்புவது சரியல்ல. வெளிநாட்டில் வாழும்போது மருத்துவர்களிடம் செல்வது கடினமானதுதான். ஆனாலும், தவறாக உங்களுக்கு ஒரு பிரச்சினை இருப்பதாகவோ, அல்லது பிரச்சினை இல்லை என்றோ நீங்களே இணையத்தைப் பார்த்து முடிவு செய்வது ஆபத்தை உருவாக்கலாம்.
எனவே, அடுத்தமுறை இணையத்தில் உங்கள் அறிகுறிகளை வைத்து உங்களுக்கு என்ன நோய் என்று தேடும் முன், இணையம் உங்கள் மருத்துவர் அல்ல என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்!