வேறு ஆணுடன் வாழ பாதுகாப்பு கேட்ட திருமணமான பெண்! உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
திருமணமான பெண் ஒருவர், தனது கணவரை விட்டு, வேறொரு நபருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவில் வாழ பாதுகாப்பு தருமாறு நீதிமன்றத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில், அலிகார் நகரத்தை சேர்ந்தவர் கீதா. திருமணமான இவர், தனது கணவரை விட்டு பிரிந்து வேறொரு நபருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் (Live-In Together) உறவில் வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கீதாவும் அவருடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் உறவில் வாழ்ந்து வரும் ஆண் நண்பரும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அலாஹாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது.
மேலும், அந்த பெண் ஏற்கனவே திருமணமாகி மற்றொரு ஆணுடன் உறவு வைத்துள்ளார், இதுபோன்ற செயல் இந்து திருமண சட்டத்திற்கு எதிரானது என கூறி அவர்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதித்தது.
இந்த மனு குறித்து சரமாரியான கேள்விகளை எழுப்பிய நீதிமன்றம் “இந்து திருமணச் சட்டத்திற்கு எதிரான ஒரு செயலாக இருக்கக்கூடிய மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியுமா? இந்திய அரசியலமைப்பின் 21-வது பிரிவின் படி ஒரு நபர் சுதந்திரமாக இருக்க அனுமதிக்கலாம், ஆனால் அந்த சுதந்திரம் அவர்களுக்கு பொருந்தக்கூடிய சட்டத்தின் எல்லைக்குள் இருக்க வேண்டும்.
எதோ ஒரு காரணத்திற்காக, மனுதாரர் தனது கணவரை விட்டு பிரிய முடிவு செய்துள்ளார், ஆனால் "வாழ்க்கை மற்றும் சுதந்திரம் என்ற போர்வையில் அவர்கள் உறவில் வாழ அனுமதிக்கலாமா" என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியது.
"ஐபிசி பிரிவு 377-ன் கீழ் பெண்ணின் கணவர் இயற்கைக்கு மாறான குற்றத்தைச் செய்தாரா என்பது தெரியவில்லை, இது தொடர்பாக அப்பெண் ஒருபோதும் அவர் மீது புகார் அளிக்கவில்லை" என்று நீதிமன்றம் கூறியது.
இந்த நிலையில் "இதுபோன்று சமூகத்தில் சட்டவிரோதத்தை அனுமதிக்கும் ஒரு மனு எவ்வாறு அனுமதிக்கப்படுகிறது, என்பதை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோம்" என்று ஐகோர்ட் குறிப்பிட்டது.