அவருக்கு அந்த அளவுக்கு முதிர்ச்சி இல்லை! இளம் வீரர் மீது கம்பீர் காட்டம்
இந்திய இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரை ஒரு நாள் போட்டிக்கு இனி பரிசீலிக்கக் கூடாது என்றும், டி20 போட்டிகளில் மட்டுமே அவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கருதுவதாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
தென் ஆப்பிரக்கான அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்தியா ஒயிட் வாஷ் ஆனது.
2 ஒரு நாள் போட்டிகளில் நடுவரிசையில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், 40 பந்துகளில் 24 ரன்கள் அடித்தார்.
2வது ஒரு நாள் போட்டியில் மட்டும் பந்து வீசிய வெங்கடேஷ் ஐயர், 5 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 28 ரன்கள் கொடுத்தார்.
இந்நிலையில் 3வது ஒரு நாள் போட்டிக்கு பின் பேசிய முன்னாள் இந்திய வீரர் கம்பீர், ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு ஒரு வீரருக்குத் தேவையான முதிர்ச்சி வெங்கடேஷ் ஐயரிடம் இல்லை, அதனால் டி20 போட்டிகளுக்காக மட்டுமே இனி பரிசீலிக்க வேண்டும் என்றும் கம்பீர் கருத்து தெரிவித்தார்.
அவரை 7-8 ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாடி விதத்தை மட்டுமே பார்த்துவிட்டு சர்வதேச அளவில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதை வைத்து ஒரு வீரரை தேர்வு செய்ய போகிறீர்கள் என்றால், அவரை டி20 கிரிக்கெட்டில் விளையாட வையுங்கள்.
ஐயர் ஐபிஎல்-ல் ஓபன் செய்திருந்தார், இப்போது அவர் மிடில் ஆர்டரில் விளையாடுகிறார்.
நீங்கள் அவரை ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு பரிசீலிக்கிறீர்கள் என்றால், அவரது ஐபிஎல் அணியிடம் அவரை மிடில் ஆர்டரில் விளையாட வைக்க சொல்லுங்கள்.
ஆனால் அவரை டி20 போட்டிகளுக்கு மட்டுமே பரிசீலிக்க வேண்டும் என நினைக்கிறேன்.
அதுவும், அவர் ஐபிஎல் தொடரில் ஓபனிங்கில் விளையாடினால், டி20 போட்டியிலும் தொடக்க வீரராக மட்டுமே விளையாட வைக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.