கனடாவில் ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. கசிந்த ஒலிப்பதிவு
Gangster Goldy Brar Claims He Killed Nijjar: கனடாவில் ஹர்தீப் நிஜ்ஜாரைக் கொன்றதாக ரவுடி கோல்டி பிரார் வெளிப்படுத்தியுள்ளார்.
கனடாவைச் சேர்ந்த ரவுடியான கோல்டி பிரார், ஹர்தீப் சிங் நிஜ்ஜாரைக் கொலை செய்ததை, கசிந்த ஓடியோ பதிவு ஒன்றில் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

2023-ல் சர்ரே குருத்வாராவுக்கு வெளியே கொலை செய்யப்பட்ட, தேடப்பட்டு வந்த காலிஸ்தானி பயங்கரவாதியின் கொலை, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே மிக மோசமான ராஜதந்திர நெருக்கடிகளில் ஒன்றை ஏற்படுத்தியது.
பாடகர் மற்றும் பாடலாசிரியர் சித்து மூஸ்வாலாவின் கொலை உட்பட இந்தியாவில் பல கொலை வழக்குகளில் தேடப்பட்டு வரும் பிரார், போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவித்ததில் நிஜ்ஜருக்கு இருந்த ஈடுபாடு காரணமாகவே அவரைக் கொன்றதாக அந்தச் சர்ச்சைக்குரிய காணொளியில் குறிப்பிட்டுள்ளார்.
காலிஸ்தானி பயங்கரவாதி பரம்ஜித் சிங் பம்மாவுடன் நடந்த உரையாடலின் போதே கோல்டி ப்ரார் இதை தெரிவித்துள்ளார். 16 முதல் 17 வயதுடையவர்களைப் போதைப்பொருள் விற்கத் தூண்டி, அதற்கேற்ப அவர்களைப் பக்குவப்படுத்தியவர்கள்...
இளைஞர்களை மிரட்டிப் போதைப்பொருள் விற்கவும், உளவாளிகளாகச் செயல்படவும் கட்டாயப்படுத்தியவர்கள்... இத்தகைய நபர்களைத் தேவைப்படும்போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில் நிஜ்ஜார் அவர்களுக்கு ஆதரவளித்து வலுப்படுத்தினார் என்று, பம்மாவுடனானதாகக் கூறப்படும் அந்த ஒலிப்பதிவில் பிரார் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அதனால்தான் நானும் எனது குழுவினரும் நிஜ்ஜாரைக் கொல்ல வேண்டியிருந்தது; ஏனெனில், இவர்கள் இளைஞர்களைப் போதைப்பொருள் விற்பனைக்குத் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அவரவர் செயல்களுக்கான விளைவுகளை அனைவரும் சந்தித்தே ஆக வேண்டும் எனவும் பிரார் குறிப்பிடுகிறார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். சில வாரங்களுக்குப் பிறகு, அந்தத் தீவிரவாதியின் கொலையில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
ஆனால், கனடிய மண்ணிலிருந்து காலிஸ்தான் ஆதரவு சக்திகள் செயல்பட ஒட்டாவா அனுமதிப்பதாகக் குற்றம் சாட்டிய இந்தியா, அந்தப் புகாரை அபத்தமானது என்று நிராகரித்தது.
அந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மிக மோசமான நிலையை அடைந்தன. நிஜ்ஜார் படுகொலையுடன் அவர்களைத் தொடர்புபடுத்த ஒட்டாவா முயன்றதைத் தொடர்ந்து, இந்தியா தனது உயர் ஸ்தானிகரையும் வேறு பல தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்தது.

லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி, ட்ரூடோவை வெளியேற்றி கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே உறவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கின. நிஜ்ஜாரின் கொலைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று கனடிய அதிகாரிகள் தரப்பு கடந்த மாதம் தெரிவித்தனர்.
ஆனால், அப்போதைய பிரதமர் ட்ரூடோவிடம் நாட்டின் உளவுத்துறை இந்த விவகாரத்தில் தெரிவித்த தகவல்களையே அவர் நாடாளுமன்றத்தில் பதிவு செய்திருந்தார்.
இதனிடையே, கோல்டி பிராரைக் கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களை வழங்குவோருக்கு 50,000 டொலர் வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்காவின் ஃபெடரல் புலனாய்வுத் துறை (FBI) கடந்த மாதம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |