சுவிஸில் பச்சிளம் குழந்தைக்கு தந்தையால் ஏற்பட்ட துயரம்
சூரிச் ஓபர்லாந்தைச் சேர்ந்த ஒரு தந்தை தனது எட்டு மாத மகனை உலுக்கி, மரணத்திற்கு காரணமான சம்பவத்தில் தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.
குறித்த சம்பவத்தில் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹின்வில் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த நபர், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்ததுடன், இது வற்புறுத்தல் காரணமாக ஒப்புக்கொள்ளப்பட்டது எனவும், அதில் உண்மை ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் உண்மை என்ன என்பதை விளக்கவும் அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஜூலை மாதமே இந்த வழக்கில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது.
தமது குடியிருப்பில் வைத்து அப்போது 8 மாதமான குழந்தையை ஆவேசமாக உலுக்கியதில், படுகாயமடைந்துள்ளது. தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சில நாட்களுக்கு பிறகு, சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துள்ளது.
இதற்கு முன்னரும் 5 முறை அந்த தந்தை தமது பிஞ்சு குழந்தையை உலுக்கியே காயப்படுத்தியுள்ளார். இதில் இருமுறை குழந்தையின் விலா எலும்பு நொறுங்கும் மட்டும் கடினமாக அழுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் குறித்த நபரிடம் இருந்து 60,000 பிராங்குகள் இழப்பீடாக பெற்றுத்தர வேண்டும் என குழந்தையின் தாயார் சார்பாக நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.