சிறையில் இருந்து தப்பி 30 ஆண்டுகளுக்கு பிறகு சரணடைந்த கைதி: அவர் சொன்ன காரணம்
அவுஸ்திரேலியாவில் சிறையில் இருந்து தப்பி சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கைதி ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
சிட்னி புறநகர் பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையம் ஒன்றில் 64 வயதான Darko Desic என்பவர் சரணடைந்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் குறித்த நபர் வேலையில்லாமல் வீடற்றவனாக மாறியதுடன் அவலோன் அருகே கடற்கரையில் தங்கி வந்துள்ளார். 1990 காலகட்டத்தில் சொந்தமாக கஞ்சா பயிரிட்ட வழக்கில் சிக்கி மூன்றரை ஆண்டுகள் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் 1992, ஆகஸ்ட் 1ம் திகதி குறித்த நபர் சிறையில் இருந்து தப்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு கண்டறிந்தது. கைது செய்யப்பட்ட பிறகு அவர் தனது சொந்த நாடான யூகோஸ்லாவியாவுக்கு நாடு கடத்தப்படுவார் என்று பயந்துள்ளார்.
யூகோஸ்லாவியாவில் இராணுவ சேவையைத் தவிர்த்ததற்காக அவருக்கு இன்னொரு தண்டனை விதிக்கப்படும் என்ற அச்சம் இவருக்கு இருந்து வந்துள்ளது. இதனையடுத்து சிறையில் இருந்து தப்பிய Darko Desic அவலோன் அருகே கடற்கரையில் தங்கி வந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளி என ஊடகங்களில் அறிவிக்கப்பட்டும், அவர் அதை கண்டுகொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், வேலை இழந்து, வருவாய் தடைப்பட்டதை அடுத்து மிகவும் அவதிக்குள்ளானதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே, மீண்டும் சிறைக்கு திரும்பும் எண்ணம் அவருக்கு வந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
தற்போது அவர் சரணடைந்துள்ள நிலையில், சிறையில் இருந்து தப்பிய குற்றத்திற்காக மேலும் 7 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
ஆனால் அவர் யூகோஸ்லாவியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார் என்பது சந்தேகமே என கூறப்படுகிறது.