ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கு திடீர் தடை விதித்த கனடா! என்ன காரணம்?
முதல் தொகுப்பை விநியோகிக்க தொடங்கும் முன்பே ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு கனடா அரசு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.
அமெரிக்க நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு உலகம் முழுவதிலும் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு காரணம், அது ஒரு ஒற்றை டோஸ் தடுப்பூசி என்பதே ஆகும்.
ஆதாவது, மற்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளை ஒருவருக்கு முழுமையாக செலுத்த இரண்டு டோஸ்கள் கால இடைவெளி விட்டு செலுத்தப்படவேண்டும். ஆனால் Janssen என்றும் அழைக்கக்கூடிய ஜான்சன் அண்ட் ஜான்சன் கொரோனா தடுப்பூசியை ஒருவர் முழுமையாக ஒரே டோஸில் செலுத்திக்கொள்ளலாம்.
இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, தென்னாபிரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்த தடுப்பூசியை அவசரகால கொரோனா தடுப்பூசியாக அங்கீகரித்தன.
அந்த வகையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் கோவிட்-19 தடுப்பூசிகளின் முதல் 300,000 டோஸ்களை அடுத்த வாரம் விநியோகிக்க கனடா திட்டமிட்டிருந்தது. ஆனால், ஹெல்த் கனடா தற்போது திடீரென குறித்த தடுப்புசியை மக்களுக்கு விநியோகிக்க தடை விதித்துள்ளது.
தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை என முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட பிறகே விநியோகத்தை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
கனடாவுக்கு வந்துள்ள தொகுப்புகள் அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் நகரத்தில் இயங்கும் Emergent BioSolutions நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டவை என தெரியவந்ததால் கனடா இந்த முடிவை எடுத்துள்ளது.
ஏனென்றால், இந்த மருந்து ஆலையில் தான் மூலப்பொருட்களை தவறாக பயன்படுத்தி 15 மில்லியன் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்பட்டன. அதனால் மொத்த மருந்துகளும் அப்படியே அழிக்கப்பட்டன.
அதே போல, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி தயாரிப்பிலும் ஏதேனும் தவறுகள் அல்லது கவனக் குறைவுகள் நடந்திருக்க வாய்ப்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் ஹெல்த் கனடா தற்காலிகமாக விநியோகிக்க தடை அறிவித்துள்ளது.
இது குறித்து ஹெல்த் கனடா வெளியிட்டுள்ள அறிக்கையில் "கனடாவுக்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து தடுப்பூசிகளையும் போலவே, ஜான்சென் தடுப்பூசிகளும் தரம், பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றிற்கான துறையின் உயர் தரத்தை பூர்த்தி செய்வதில் சுகாதார கனடா திருப்தி அடைந்தவுடன் மட்டுமே விநியோகத்திற்காக வெளியிடப்படும்" என கூறப்பட்டுள்ளது.