அடிக்கடி உடல்நிலை பாதிப்பு: மீண்டும் ஜாமின் கேட்ட செந்தில் பாலாஜி.. நாளை விசாரணை
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை காரணம் காட்டி ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.
செந்தில் பாலாஜி
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார்.
இவரை கைது செய்யும் போதே நெஞ்சுவலி ஏற்பட்டு இதய அறுவைசிசிச்சை செய்யப்பட்டது. பின்பு, சிகிச்சை முடிந்தவுடன் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதன்பிறகு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்தார். ஆனால்,செந்தில் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை நீதிமன்ற அமர்வு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
மீண்டும் ஜாமின் மனுத்தாக்கல்
இந்நிலையில், புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு, நீரிழிவு மற்றும் ரத்தக்கொதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், மருத்துவ பரிசோதனை முடிந்த செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில், இவரது சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாமின் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவரது சார்பில், மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன் பேசினார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |