39 வயதில் இளம் நடிகர் மரணம்! மாரடைப்பு ஏற்படுவது ஏன்? தடுக்க என்ன செய்யலாம்?
சமீபகாலமாகவே இளம் வயதில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நேற்று கன்னட திரைப்பட நடிகரான நிதின் கோபி, தன்னுடைய 39வயது வயதில் திடீர் மாரடைப்பால் காலமானார்.
அதிகாலை வேளை 4 மணியளவில் மாரடைப்பு ஏற்பட, மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
மாரடைப்பு ஏற்படுவது எப்படி?
சுத்திகரிக்கப்பட்ட ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்வது இதயத்தின் பணி, இதனை ரத்த குழாய்கள் செய்து வருகின்றன.
இதில் அடைப்பு ஏற்படும் பட்சத்தில் ரத்தம் செல்வதில் பாதிப்பு ஏற்படும், எனவே இதயத்தில் இருந்து செல்லும் ரத்தத்துடன் ஆக்சிஜன் நிற்பதால் ஏற்படும் விளைவையே மாரடைப்பு என்கிறோம்.
மாரடைப்பு ஏற்படும் போது கடுமையான வலி உண்டாகும், இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது கெட்ட கொழுப்புகளின் அளவு அதிகரிப்பதே.
உணவுப்பழக்கம், மன அழுத்தம், உடற்பயிற்சி இல்லாதது போன்ற பல காரணங்களில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரிக்கும் போது ரத்த குழாயில் அடைத்து கொள்ளும்.
இதுவே மாரடைப்பு ஏற்பட காரணம், இதுதவிர பரம்பரை காரணங்களால் கூட மாரடைப்பு ஏற்படலாம்.
இளம் வயதினருக்கு ஏற்படுவது ஏன்?
சமீப ஆண்டுகளாக அதாவது 2019ம் ஆண்டுக்கு பின்னர் இளவயதில் மாரடைப்பு மரணங்கள்அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
குறிப்பாக பெண்களை விட ஆண்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர், கெட்ட கொழுப்பும், பரம்பரை ரீதியாகவும் மாரடைப்பு ஏற்படலாம்.
அதி தீவிரமான உடற்பயிற்சியும், உடலை மெருகேற்ற எடுத்துக் கொள்ளப்படும் புரோட்டீன் பவுடர்களும் மாரடைப்பு ஏற்பட ஒரு காரணமே.
இதுதவிர குடிப்பழக்கம், போதைப்பழக்கம், மன அழுத்தம் போன்ற காரணங்களையும் குறிப்பிடலாம்.
மாரடைப்பு தடுக்க என்ன செய்யலாம்?
தினமும் 30 நிமிட நடைப்பயிற்சி பல நோய்களிலிருந்து நம்மை மீட்டு உடலை ஆரோக்கியமாக்கும்.
வீட்டிலிருந்து பக்கத்து கடைக்கு சென்றால் கூட வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்லலாம், தொலைபேசியில் நடந்து கொண்டே பேசலாம், ஒரு இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் ஒரு மணிநேரத்திற்கு ஒருதடவையாவது எழுந்து நடக்கலாம்.
மிக முக்கியமாக உணவுகளில் கவனம் செலுத்த வேண்டும், நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதுவே நமது உடலின் ஆரோக்கியத்தை வெளிப்படுத்தும்.
கொழுப்பு குறைந்த உணவுகள், பழங்கள், காய்கறிகள் என கலவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிடலாம்.
உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு, நீரிழிவு நோய் போன்ற உடல்நலக்குறைபாடுகள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை கேட்பது அவசியம்.
அறிகுறிகள்
- நெஞ்சு பகுதியில் ஒருவித இறுக்கம், நெஞ்சில் அசௌகரியம்.
- தோள்பட்டையுடன் சேர்ந்த வலி, தொடர்ந்து கழுத்து முதுகு பகுதியில் கடுமையான வலி.
- வாந்தி, வியர்வை, மூச்சு விடுவதில் சிரமம்.
- எப்போதுமே உடற்சோர்வாக இருத்தல், தூக்கமின்றி தவித்தல்.
- கடுமையான மன அழுத்தம்.
- கை- கால் பலவீனம், நெஞ்செரிச்சல், அஜீரணம்.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.