மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவே... உயிரை மாய்த்துக்கொண்ட 12 வயது பிரித்தானியச் சிறுமியின் பதிவு
பிரித்தானியாவில் துஸ்பிரயோகத்திற்கு இரையான 12 வயது சிறுமி ஒருவர், தமது உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்னர் சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காயப்படுத்த விரும்பாததால்
பிரித்தானியாவின் Southport பகுதியை சேர்ந்த Semina Halliwell என்ற 12 வயது சிறுமி, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தாம் இறக்கப் போகிறேனா என மருத்துவர்களிடம் வினவியதும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஜூன் மாதம், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளை அதிகமாக உட்கொண்டு உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் சிறுமி Semina Halliwell மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது, சிறுமி தமது உயிரை மாய்த்துக்கொள்ள முடிவெடுத்ததன் சில நிமிடங்கள் முன்னர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்துகள் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இனி உயிருடன் இருக்க விரும்பாததை விட மோசமானது எதுவுமில்லை ஆனால் நீங்கள் நேசிக்கும் சிலரை காயப்படுத்த விரும்பாததால் மட்டுமே உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
சில நிமிடங்களுக்கு பின்னர், மனதளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளேன், மகிழ்ச்சியாக இருப்பதாக நாளும் நடிக்கலாம், ஆனால் மிகுந்த வலியுடன் இருக்கிறேன், மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கவே ஆசைப்படுகிறேன், எனது வாழ்க்கையை மொத்தமாக தொலைத்துவிட்டேன் என பதிவிட்டுள்ளார்.
விசாரணை அதிகாரி Chris Maher தெரிவிக்கையில், ஜூன் 9ம் திகதி நள்ளிரவு Semina Halliwell தமது சமூக ஊடக பக்கத்தில் இதை பதிவு செய்துள்ளார் என உறுதி செய்துள்ளார். மட்டுமின்றி, தற்கொலை முயற்சிக்கு பின்னர் அவர் பதிவு செய்துள்ள புகைப்படமும் அலைபேசியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சிறுவன் ஒருவனால்
தமது சகோதரருக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள மருந்துகளையே Semina Halliwell தற்கொலைக்கு என உட்கொண்டுள்ளார். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், ஆபத்தான நிலையில் மூன்று நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டு, இறுதியில் உறுப்புகள் செயலிழந்த நிலையில் ஜூன் 12ம் திகதி மரணமடைந்துள்ளார்.
சிறுமி Semina Halliwell மரணமடைவதற்கும் 5 மாதங்கள் முன்னர், ஜனவரி மாதம் சிறுவன் ஒருவனால் காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்லபப்ட்டு Semina Halliwell வன்கொடுமைக்கு இரையானார்.
அதன் பின்னரே உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் Semina Halliwell மிகவும் பாதிக்கப்பட்டதாக அவரது தாயார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, சிறுமியின் ஆடைகள் அற்ற புகைப்படம் ஒன்றும் அவர் கல்வி பயின்ற பாடசாலை மாணவர்களிடையே பரவியதும் சிறுமியை தற்கொலை முடிவெடுக்கத் தூண்டியதாக கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |