ஸ்தம்பித்த ஹீத்ரோ... சிக்கித் தவிக்கும் 300,000 பயணிகள்: வெளிவரும் புதிய பின்னணி
உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றான ஹீத்ரோ, ஒரு சிறிய தீ விபத்து காரணமாக எவ்வாறு ஸ்தம்பித்தது என்பது குறித்து நிர்வாகத் தலைவர்கள் கேள்விகளை எதிர்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல்லாயிரக்கணக்கான பயணிகள்
மின்சார துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதை அடுத்து, இன்றும் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிக்கின்றனர்.
உலகின் பரபரப்பான விமான நிலையம் ஒன்று மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதால், நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளின் தற்போதைய நிலைமை அம்பலப்பட்டுள்ளது.
நேற்றிரவு, பேரழிவு குறித்த விசாரணையை பயங்கரவாத தடுப்பு பொலிசாரால் நடத்தப்பட்டது. ஆனால் வெஸ்ட்மின்ஸ்டர் வட்டாரங்கள் மனிதரால் ஏற்பட்டிருக்கும் தவறு என குற்றம் சாட்டின.
இந்த திடீர் தீ விபத்தால் கிட்டத்தட்ட 300,000 பயணிகள் பாதிக்கப்பட்டனர், இதன் விளைவாக 1,350க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன அல்லது தாமதமாகின.
சிங்கப்பூர் மற்றும் பெர்த்தில் இருந்து வந்த விமானங்களில் பயணித்தவர்கள், லண்டனுக்கு பேருந்துகளில் செல்வதற்கு முன்பு பாரிஸுக்கு திருப்பி விடப்பட்டனர். நேற்று இரவு இறுதியாக எட்டு நீண்ட தூர பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்கள் புறப்பட்டு சென்றது.
இந்த நிலையில் ஐரோப்பாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரோ, தற்காப்பு மின்சாரத்தை நம்பியிருக்க இயலாமைக்கு ஆய்வாளர்கள் விமர்சித்தனர். மேலும், ஹீத்ரோ போன்ற பெரிய மற்றும் முக்கியமான விமான நிலையம் ஒன்று இப்படியான ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் முடங்கியுள்ளது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
சந்தேகத்திற்குரியதாகக் கருதவில்லை
சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் இது சதி வேலையாக இருக்கலாம், ரஷ்யாவாக இருக்கலாம் போன்ற தகவல்கள் தீயாக பரவின. இந்த நிலையில் ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகள் தெரிவிக்கையில்,
இந்த சம்பவத்தை சந்தேகத்திற்குரியதாகக் கருதவில்லை, இருப்பினும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்று விளக்கமளித்துள்ளனர். பல்வேறு சிறப்பு விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர், மேலும் முழுமையான மதிப்பீடுகள் முடிவதற்கு சிறிது தாமதம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஒரு செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
ஹீத்ரோ விமான நிலையம் ஒரு நாள் மூடப்படுவதால் பிரித்தானியாவுக்கு 20 மில்லியன் பவுண்டுகள் இழப்பை ஏற்படுத்துகிறது. லட்சக்கணக்கான பயணிகளுக்கு உணவளிப்பதுடன், ஹீத்ரோ விமான நிலையமானது நாளுக்கு 4,300 டன் சரக்குகளுக்கான நுழைவாயிலாகவும் உள்ளது.
இதன் மதிப்பு 543 மில்லியன் பவுண்டுகளாகும். இதனிடையே, நேற்று ஒரே நாளில் 670 விமானங்கள் வெளியேற முடியாமல் போனதுடன் 100,000 வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |