லண்டனிலிருந்து இந்தியா நோக்கி புறப்பட்ட விமானம்: 3 மணி நேரத்துக்குப் பின் பிரித்தானியா திரும்பியதன் பின்னணி
இந்தியா நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, மூன்று மணி நேரப் பயணத்துக்குப் பின் மீண்டும் பிரித்தானியா திரும்பியது.
இந்தியா நோக்கிப் புறப்பட்ட விமானம்
நேற்று (ஜனவரி 10) காலை, மணி 11.10க்கு, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, இந்தியா நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தது.
மூன்று மணி நேரத்திற்குப் பின், விமானம் ரொமேனியா பகுதியில் பறந்துகொண்டிருந்த நிலையில், மதியம் மணி 3.10க்கு விமானத்தில் தொழில் நுட்பக் கோளாறு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
மீண்டும் பிரித்தானியாவுக்கு விமானத்தைத் திருப்ப முடிவு செய்த விமானி
ஆகவே, கருங்கடலுக்குமேல், பல்கேரியா மற்றும் துருக்கி கரைப்பகுதியை விமானம் எட்டிய நிலையில், விமானி விமானத்தை மீண்டும் பிரித்தானியா நோக்கி திருப்பியுள்ளார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் குவிக்கப்பட்டிருக்க, விமானம் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத தாமதத்துக்காக விமானப் பயணிகளிடம் மன்னிப்புக் கோரியுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், கோளாறு ஏற்பட்ட விமானத்துக்கு பதிலாக வேறு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.