ஜூன் மாத வெப்ப அலை... ஜேர்மனியில் நீரில் மூழ்கி பலியானோர் எண்ணிக்கை
ஜேர்மனியில் ஜூன் மாதம் நீரில் மூழ்கி கிட்டத்தட்ட 100 பேர்கள் மரணமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இறப்பு எண்ணிக்கை
மேற்கு ஐரோப்பாவில் நூற்றுக்கணக்கான கூடுதல் உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்த கடும் வெப்பநிலை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

உத்தியோகப்பூர்வமாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஜேர்மனியில் கடந்த ஜூன் மாதத்தில் சில பகுதிகளில் வெப்பநிலை 41.7 டிகிரி செல்சியஸ் (107.1 டிகிரி பாரன்ஹீட்) வரை உயர்ந்ததைத் தொடர்ந்து, நீர் நிலைகளை நாடியவர்களில் 99 பேர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்;
இது கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் அந்நாட்டில் பதிவான மிக மோசமான இறப்பு எண்ணிக்கையாகும். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள் என்று அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது;
வயது விவரம் அறியப்பட்டவர்களில் 40 பேர் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஆண்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பி வெளியிட்டுள்ள தகவலின்படி, கோடைக்காலத்தின் கடும் வெப்பமான தொடக்கத்தின்போது ஐரோப்பா முழுவதும் 1,300-க்கும் மேற்பட்டோர் மரணமடைந்தனர்.
ஜூன் மாதத்தில்
ஐரோப்பியக் கண்டம் முழுவதும் நீரில் மூழ்கி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது; ஜூன் 19 முதல் பிரான்ஸில் மட்டும் 131 பேர் நீரில் மூழ்கி மரணமடைந்துள்ளதாக அந்நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் மெரினா ஃபெராரி வெள்ளிக்கிழமையன்று தெரிவித்தார்.

இதனிடையே, ஜேர்மனியின் முக்கிய பொது சுகாதார முகமை கடந்த வாரம் வெளியிட்ட தகவலின்படி, அந்நாட்டில் இந்த ஆண்டு குறைந்தது 5,120 பேர் வெப்பம் தொடர்பான காரணங்களால் மரணமடைந்துள்ளனர்; இவர்களில் பெரும்பாலானோர் ஜூன் மாதத்தில் இறந்தவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.
ராபர்ட் கோச் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், மரணமடைந்தவர்களில் சுமார் 4,270 பேர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் என்று கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |