ஒரு பக்கம் வெப்பம்... மறுபக்கம் புயல்: பிரான்சில் இருவர் பலி
பிரான்சில் ஒரு பக்கம் வெப்பம் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க, மறுபக்கம் இடியும் மழையும் புயலும் கோரத்தாண்டவம் ஆடியுள்ளன.
ஒரு பக்கம் வெப்பம்... மறுபக்கம் புயல்
பிரான்சின் பல பகுதிகளில் நிலவிவரும் கடும் வெப்பம், காட்டுத்தீ அபாயத்தை அதிகரித்துவிடுமோ என ஒரு பக்கம் அச்சம் நிலவி வரும் நிலையில், வியாழக்கிழமையன்று பிரான்சின் பல பகுதிகளில் இடி, மின்னல், கல்மழை என புயல் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது.
இந்நிலையில், புயல் காரணமாக மரம் ஒன்று விழுந்ததில் மத்திய பிரான்சிலுள்ள Haute-Vienne என்னுமிடத்தில் 30 வயதுப் பெண்ணொருவர் பலியாகியுள்ளார்.

தென்கிழக்கு பிரான்சிலுள்ள Isère என்னுமிடத்தில், ஒருவர் தனது ஒர்க்ஷாப்பில் வேலை செய்துகொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை Loire பகுதியில் கல்மழை பெய்துள்ளது. விழுந்த பனிக்கட்டிகள் சில 8 சென்றிமீற்றர் அகலம் கொண்டவையாக இருந்துள்ளன. பல வீட்டுக் கூரைகள் கல்மழையால் சேதமடைந்துள்ளன. சுமார் 8,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

Haute-Vienne பகுதியிலும் 3,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
Ille-et-Vilaine பகுதியில், அரை மணி நேரத்தில் 35 மில்லிமீற்றர் மழை பொழிந்ததால், பல பகுதிகளை பெருவெள்ளம் சூழ்ந்துள்ளது.

ஆக, இவ்வளவு நாட்களாக பிரான்ஸ் மக்களை வெயில் வாட்டி எடுத்த நிலையில், கடந்த சில நாட்களாக மழை வாட்டி வதைக்க, இப்போது வானம் தெளிவாகியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |