இதிலும் பாரபட்சமா... புலம்பும் பிரான்ஸ் மக்கள்
வளரும் நாடுகள் என அழைக்கப்படும் நாடுகளில் வாழும் மக்கள், பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளை அண்ணாந்து பார்க்கும் நிலையில், அங்கும் பல மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள் என்னும் உண்மை தெரியவரும்போது வியப்பு ஏற்படுவதை மறுப்பதற்கில்லை.
இந்நிலையில், அதிகரித்துவரும் வெப்பம் தொடர்பில், பிரான்ஸ் மக்களிடையே பாரபட்சம் நிலவுவதைக் குறித்த ஒரு செய்தி வெளியாகி வியப்பை அதிகரித்துள்ளது.
புலம்பும் பிரான்ஸ் மக்கள்
பிரான்சில் கடுமையான வெப்பம் நிலவிவருகிறது. வெப்பத்தால், வழக்கத்தைவிட கூடுதலாக 2.025 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

இந்நிலையில், பணக்காரர்கள் வெயில் தெரியாமல் சொகுசாக வாழ்கிறார்கள். நாங்களோ வெப்பத்தால் கஷ்டப்படுகிறோம் என்கிறார்கள் பிரான்சில் வாழும் ஏழை மக்கள்.
பிரான்சிலுள்ள La Plaine என்னுமிடத்தில் வாழ்கிறார் இப்ராஹிம் (Ibrahim Doukanthi). வெயில் தாங்கமுடியாமல், Saint-Denis கால்வாயில் இறங்கி வெப்பத்தைத் தணித்துக்கொள்ள முயற்சிக்கிறார் அவர்.

தண்ணீர் பச்சை நிறமாக உள்ளது, உள்ளே என்ன இருக்கிறதென்றே தெரியவில்லை. பயமாகத்தான் இருக்கிறது. என்றாலும், வெப்பத்தைத் தணிக்க வேறு வழியில்லை. அதனால் தண்ணீரில் இறங்கப்போகிறேன் என்கிறார் அவர்.
Saint-Denis என்னுமிடத்தில் சந்தை ஒன்றில் உட்கார்ந்திருக்கிறார் நத்திஃபா (Natifa Segli). முனிசிபல் அலுவலகத்தில் வேலை செய்கிறார் நத்திஃபா. அலுவலகத்துக்குள் உட்கார முடியவில்லை. பயங்கர சூடாக இருக்கிறது. அதனால், கொஞ்சம் நிழலில் உட்கார்ந்துகொள்ளப்போகிறேன் என்கிறார் அவர்.

2003இலேயே ஒரு வெப்ப அலை உருவானது. ஆனால், பிரான்ஸ் அரசு அதிலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்கிறார் அவர்.
லூயிஸா (Louiza Ammari), குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் childcare worker ஆக பணி செய்கிறார்.
அரசு ஒதுக்கியுள்ள வீட்டில் வாழும் லூயிஸா, அங்கு ஏர் கண்டிஷனர் பொருத்த அனுமதி கிடையாது என்கிறார்.
அதேபோல, பிள்ளைகளை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள ரப்பரில் செய்யப்பட்ட சிறு நீச்சல் குளம் போன்ற அமைப்புகளை வீட்டினருகே அமைக்கவும் பொலிசார் தடை விதித்துள்ளார்கள் என்கிறார்.
ஆக, எங்களைக் குளிர்வித்துக்கொள்ள வழியே இல்லை என்கிறார் அவர்.
இவர்களைப் போலவே வெப்பத்தால் அவதியுறும் மக்கள் பலர் தாங்கள் அனுபவித்துவரும் கஷ்டங்களை ஊடகங்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். இதில் வீடற்றவர்கள் நிலையோ படுமோசம்.
விடயம் என்னவென்றால், பணக்காரர்கள் வீடுகளுக்கு ஏர் கண்டிஷனர்கள் பொருத்திக்கொள்கிறார்கள், நீச்சல் குளங்கள் அமைத்துக்கொள்கிறார்கள்.
ஆக, இதிலும் ஏழைகளுக்கு பாரபட்சம்தான் காட்டப்படுகிறது என்று கூறும் சமூக ஆர்வலர்கள், வெப்பத்தை மக்கள் எதிர்கொள்வதற்காக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் போதாது என்கிறார்கள்.
ஆக, அதிகபட்ச மக்களை பாதுகாக்கும் வகையிலும், தெருக்களில் வாழும் மக்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையிலும் அரசு நீண்டகால கொள்கைகள் வகுக்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |