பிரான்சில் ஆலங்கட்டி மழை... டென்னிஸ் பந்து அளவில் வானிலிருந்து விழுந்த பனிக்கட்டிகளால் கடும் சேதம்
பிரான்சில் சில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்த நிலையில், டென்னிஸ் பந்து அளவுக்கு பனிக்கட்டிகள் வானிலிருந்து விழுந்ததால் வீடுகள் மற்றும் கார்கள் சேதமடைந்தன.
22ஆம் திகதி இரவு, சுமார் மூன்று மணி நேரம் அடித்த புயல் ஒன்றின்போது, சுமார் 250 கிராம் எடையுள்ள பனிக்கட்டிகள், மத்திய மற்றும் மேற்கு பிரான்சிலுள்ள வீடுகள் மற்றும் கார்களை பதம் பார்த்தன.
6,000 முறை மின்னல் தாக்கிய அந்த புயலின்போது விழுந்த பனிக்கட்டிகளால் 340 வீடுகளும் 1,000 கார்களும் சேதமடைந்துள்ளன.
ஆலங்கட்டி மழையால் பாதிக்கப்பட்டதால் தங்கள் வீடுகளில் தங்க முடியாத நிலை ஏற்பட்ட மக்களுக்காக Châteauroux என்ற பகுதி உள்ளூர் அதிகாரிகள், உடற்பயிற்சி மையம் ஒன்றை மக்கள் தங்குவதற்காக திறந்துவிட்டார்கள்.
ஆலங்கட்டி மழையின்போது தங்களுக்கு 2,000 தொலைபேசி அழைப்புகள் வந்ததாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளார்கள்.
புயலைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கைகள், இன்று காலை வரை அமுலில் இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.