அடுத்த 24 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை மையம் தகவல்
அடுத்த 24 மணி 11மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
வானிலை மைய தலைவர் கூறுகையில்..
"கேரள கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் 26-ம் திகதி வாக்கில், ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று 27-ம் திகதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவக்கூடும்.
அடுத்து வரும் மூன்று தினங்களைப் பொறுத்தவரையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
மேலும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது'' என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |