வரலாறு காணாத கனமழையால் வீடுகளில் புகுந்த வெள்ளம்.., தத்தளிக்கும் தென் தமிழகம்
தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இதுவரை காணாத அளவு கனமழை பெய்து வருவதால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து தீவு போல காட்சியளிக்கிறது.
4 மாவட்டங்களில் தொடர் மழை
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முதல் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் போக போக இடைவிடாமல் கனமழையாக பெய்ய தொடங்கியது.
மேலும், பல்வேறு மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 4 மணி முதலே பெய்ய தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளான மணிமுத்தாறு அணை, பாபநாசம் அணை,சேர்வலாறு அணை பகுதிகளிலும் அதிக அளவில் மழை பெய்தது.
தாமிரபரணி ஆற்றில் 50 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் ஓடுவதால் கரையோரம் இருக்கும் பகுதி மக்களின் வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அதுமட்டுமல்லாமல், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம், திருச்செந்தூர், உடன்குடி, காயல்பட்டினம், ஆறுமுகநேரி ஆகிய இடங்களிலும் மழை தொடர்ந்து பெய்தது.
தூத்துக்குடியில் மழை பதிவு
கடந்த 24 மணிநேரத்தில் தூத்துக்குடி காயல்பட்டினத்தில் 93.2 செ.மீ அளவில் அதிக கனமழை பதிவாகியுள்ளது. திருச்செந்தூரில் 67.3 செ.மீ, சாத்தான்குளம் 49 செ.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 61.3 செ.மீ., கோவில்பட்டி 45.5 செ.மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் முழங்கால் அளவிற்கு மழைநீர் தேங்கியுள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குற்றால அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அப்பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |