இன்று வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., அடுத்த 3 நாட்களில் எங்கெல்லாம் கனமழை?
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்..,
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 48 மணிநேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
10ஆம் திகதி கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரியில் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழையும் பெய்யும்.
மேலும், 11ஆம் திகதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |