பலத்த மழையால் நதிகள் ஏரிகளில் உயரும் நீர் மட்டம்... சுவிஸ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சுவிட்சர்லாந்தின் வடக்கு பகுதி முழுமைக்கும் பலத்த மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் கவனமாக இருக்குமாறு சுவிஸ் ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நதிகளும் ஏரிகளும் அபாய அளவை எட்டியுள்ளன. Lucerne ஏரியின் மீது அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான பாலங்கள் நீர் மட்டம் உயர்ந்து வருவதைத் தொடர்ந்து மூடப்பட இருக்கின்றன
. உள்ளூர் தீயணைப்புத்துறைத் தலைவர் மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
குறிப்பாக என்ன நடக்கிறது என வேடிக்கை பார்க்க யாரும் வரவேண்டாம் என அவர் மக்களை வலியுறுத்தியுள்ளார். சூரிச் பொலிசார், வெள்ளம் காரணமாக உயிருக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் நீச்சல் அடிக்கவும், படகு சவாரி செய்யவும் மக்களுக்கு தடை விதித்துள்ளார்கள்.
Zug மாகாணத்திலுள்ள Reuss நதி பெருக்கெடுத்து, கரை உடைந்து வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து வருவதால், கரையோரம் வாழும் மக்கள் வெளியேற்றப்பட தயாராகி வருகிறார்கள்.
உள்ளூரில் சில இடங்களில் நிலைமை சீரடைந்து வந்தாலும், இன்று முழுவதும் மழை இருக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதால் ஒருவேளை நிலைமை மாறலாம்.
ஆகவே மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு சுவிஸ் ஜனாதிபதி Guy Parmelin மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.