கொட்டித்தீர்க்கும் கனமழை... மிதக்கும் சென்னை: மக்கள் கடும் அவதி
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கித் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பெய்து வரும் கனமழையால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நகரின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புக்குள் மழை நீர் புகுந்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
வடகிழக்கு பருவமழை காரணமாகவும் கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மதியம் சற்று நேரம் மழை நின்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், மாம்பலம், அசோக்நகர், தி.நகர், நந்தனம், சூளைமேடு, அண்ணா நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலே மழை பெய்து வருவதால் சென்னையின் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருவதுடன் உபரி நீரும் திறந்துவிடப்பட்டு வருகிறது.