கனடா வான்பரப்பில் பறக்கும் மர்ம பொருள்... கண்காணிப்பு தீவிரம்
வடக்கு கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறப்பதாக Norad என அறியப்படும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு ஆணையம் கண்டறிந்து கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள்
அத்துடன், அமெரிக்காவின் அலாஸ்கா மற்றும் கனடாவில் இருந்தும் ராணுவ விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வடக்கு கனடாவின் வான்பரப்பில் மர்ம பொருள் ஒன்று பறப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் Norad தெரிவித்துள்ளது.
மேலும், அந்த பொருள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதையும் இதுவரை Norad வெளியிடவில்லை. மட்டுமின்றி, முதற்கட்ட விசாரணையில் இருப்பதாகவும், அந்த மர்ம பொருளின் நகர்வுகள் குறித்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே சீனாவின் கண்காணிப்பு பலூன் ஒன்றை கடந்த வாரம் அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ள நிலையில், கனடா வான்பரப்பில் மர்ம பொருள் பறப்பதை Norad தற்போது உறுதி செய்துள்ளதுடன், கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்று, அமெரிக்க வான்வெளியில் அதிக உயரத்தில் பறந்த குட்டி கார் அளவிலான பொருளை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் தகவல் வெளியிட்டிருந்தது. குறித்த மர்ம பொருளின் பிறப்பிடம் தொடர்பில் உறுதியான தகவல் தெரியவரவில்லை என்றே கூறப்படுகிறது.
பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
கடந்த வாரம் சீன உளவு பலூன் ஒன்றை சுட்டு வீழ்த்திய நிலையில், வெள்ளிக்கிழமை மீண்டும் ஒரு பறக்கும் பொருளை சுட்டு வீழ்த்தியதாக வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
Credit: Andrew Vaughan
வடமேற்கு மாநிலமான அலாஸ்கா மீது குறித்த பொருள் பறந்ததாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
அலாஸ்கா மீது பறந்த பொருளானது 40,000 அடி உயரத்தில் காணப்பட்டதாகவும், பயணிகள் விமானங்களுக்கு அது அச்சுறுத்தலாக மாற வாய்ப்பிருப்பதாக கண்டறியப்பட்டதை அடுத்து, ஜனாதிபதி ஜோ பைடனின் உத்தரவுக்கிணங்க சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் வெள்ளைமாளிகை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.