ஹிஜாப் அணிவதால் பிரெஞ்சு விளையாட்டு வீராங்கனை எதிர்கொண்ட பிரச்சினை: ஐ.நா நிபுணர்கள் விமர்சனம்
விளையாட்டுப்போட்டிகளில் கலந்துகொள்ளும் இஸ்லாமிய விளையாட்டு வீராங்கனைகளுக்கு தடை விதிக்கும் பிரான்ஸ் அரசின் முடிவை, ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் விமர்சித்துள்ளார்கள்.
பிரெஞ்சு வீராங்கனை எதிர்கொண்ட பிரச்சினை
பிரெஞ்சு தடகள வீராங்கனையான சௌன்கம்பா சில்லா (Sounkamba Sylla, 26) என்பவர், ஹிஜாப் அணிவதால் ஒலிம்பிக் துவக்க விழாவில் கலந்துகொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது.
பின்னர், தனது தலைமுடியை மறைக்கும் வகையில் தொப்பி ஒன்றை அணிய சம்மதித்தபிறகே அவர் ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டார்.
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்த செய்தி ஒன்றில், நீங்கள் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்டிருக்கிறீர்கள், ஆனால், நீங்கள் தலையில் ஸ்கார்ஃப் அணிவதால் உங்களுக்கு ஒலிம்பிக் போட்டிகள் துவக்க விழாவில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது! என தனது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார் சில்லா.
மனித உரிமைகள் அமைப்பு விமர்சனம்
இந்நிலையில், பிரான்சின் நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள் விமர்சித்துள்ளார்கள்.
அரசின் நடுநிலை மற்றும் மதச்சார்பற்ற தன்மை ஆகியவை, கருத்துச் சுதந்திரம் மற்றும் மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்திற்கான உரிமைகள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான சட்டபூர்வமான காரணங்கள் அல்ல.
இந்த சுதந்திரங்களின் எந்தவொரு வரம்புகளும் விகிதாசாரமாக இருக்க வேண்டும், சர்வதேச சட்டத்தில் கூறப்பட்டுள்ள குறிக்கோள்களில் ஒன்றை அடைய அவசியமானதாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலால் நியமிக்கப்பட்ட நிபுணர்கள்.
யூகங்கள், அனுமானங்கள் அல்லது தவறான எண்ணங்களின் அடிப்படையில் அவை ஒருபோதும் இருக்கக்கூடாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் ஹிஜாப் உள்ளிட்ட மதச் சின்னங்களை அணிவதைத் தடை செய்வதற்காக பிரான்ஸ் மதச்சார்பின்மை விதிகளை நடைமுறைப்படுத்தியது.
அதன் தொடர்ச்சியாகவே, ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்கள் கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கவும், அவர்கள் அங்கம் வகிக்கும் பிரெஞ்சு சமூகத்தின் அனைத்து அம்சங்களிலும் பங்கேற்கவும் அவர்களுக்கு சம உரிமைகள் இருக்க வேண்டும் என, ஐ.நா நிபுணர்கள் எட்டு பேர் கையெழுத்திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |