ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் கிடைத்த கடிதம்: விமானக் கடத்தல் அச்சுறுத்தலால் பரபரப்பு
Hijack note found on Air India flight lavatory: ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் விமான கடத்தல் தொடர்பான கடிதம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தின் கழிவறையில் கிடைத்த கடத்தல் கடிதம்
கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பை நகருக்கு பறக்க இருந்த ஏர் இந்தியா விமானத்தின் கழிவறையில் கையால் எழுதப்பட்ட விமானக் கடத்தல் தொடர்பான கடிதம் ஒன்றை விமானப் பணிப்பெண் ஒருவர் கண்டெடுத்தார்.

விமானம் புறப்படுவதற்கு சற்று முன்னதாக (காலை 10.20 மணிக்கு) இந்த விமான கடத்தல் கடிதம் பணிப்பெண்ணால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில் காலை 11.10 மணியளவில் இந்த விமானம் ஆனது கடத்தப்படும் என குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவசர கால பாதுகாப்பு வழிமுறைகள் செயல்படுத்தப்பட்டு விமானம் முழுமையான தனிமைப்படுத்தப்பட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பயணிகள்
\இந்நிலையில் கொல்கத்தா விமான நிலையம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், கொல்கத்தா - மும்பை வழித்தடத்தில் இயங்கும் AI 2772 (ஏர்பஸ் A320, பதிவு எண்: VT-TNH) என்ற விமானத்தில் இந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மேலும் பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டதோடு, சந்தேகத்திற்குரிய நபர்களின் நடமாட்டம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த சோதனையில் எந்தவொரு சந்தேகத்திற்குரிய பொருட்களோ அல்லது வெடிமருந்துகளோ கிடைக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் கழிப்பறையில் இந்த மிரட்டல் கடிதத்தை யார் எழுதி வைத்தார்கள் என்பதை கண்டறிய உள்ளூர் காவல் துறையினரும், விமான நிலைய பாதுகாப்பு முகமைகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.