முதலமைச்சருக்கு வாங்கப்பட்ட சமோசாக்கள் மாயம்.., CID விசாரணைக்கு உத்தரவா?
இமாச்சல பிரதேச மாநில முதலமைச்சருக்கு வாங்கப்பட்ட சமோசாக்கள் மாயம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
சமோசாக்கள் மாயம்
கடந்த மாதம் 21 -ம் திகதி இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிம்லா பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு அம்மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக் வருகை தந்தார்.
அப்போது, முதலமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு கொடுப்பதற்காக சமோசா வாங்கிவருமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, முதலமைச்சருக்காக வாங்கிவரப்பட்ட 3 பெட்டிகளில் அடங்கிய சமோசாக்கள் அவருக்கு வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது.
பின்னர், இது தொடர்பான விசாரணையும் நடைபெற்றது. அதன்படி வெளியிடப்பட்ட அறிக்கையில், "முதலமைச்சர் சுக்விந்தர் சிங்குக்கு சமோசாக்கள் வாங்கி வருமாறு சப்-இன்ஸ்பெக்டருக்கு பொலிஸ் ஐஜி உத்தரவிட்டிருந்தார்.
பின்னர், 3 பாக்கெட்களில் சமோசாக்களை உதவி சப்-இன்ஸ்பெக்டர் (ஏஎஸ்ஐ) வாங்கி வந்தார். இதில், கொண்டுவரப்பட்ட சமோசாக்கள் முதலமைச்சருக்கு என்று சப்-இன்ஸ்பெக்டருக்கு மட்டுமே தெரியும்.
இந்த காரணத்தால் சமோசா வாங்கி வந்த ஏஎஸ்ஐ. உயர் அதிகாரிகளுக்கு சிற்றுண்டிகளை விநியோகம் செய்யும் மெக்கானிக்கல் டிரான்ஸ்போர்ட் (எம்டி) பிரிவு ஊழியர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
இப்படி சமோசாக்கள் கைமாறி முதலமைச்சருக்கு சென்றடையவில்லை. மாறாக, அங்குள்ள காவலர்களுக்கு சமோசாக்கள் வழங்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில பொலிஸ் டிஜிபி கூறுகையில், "சமோசாக்கள் தொடர்பாக சிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை. காவல்துறை மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டது" என்றார்.
இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியான பாஜக ஊதி பெரிதாக்குகிறது என்றும் ஆளும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |