நெற்றியில் குங்குமம் இட அனுமதி மறுப்பு: லண்டன் பள்ளி மீது வழக்கு தொடர்ந்த பெற்றோர்
பிரித்தானியாவின் லண்டனில் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகனை Tilak-Chandlo அணிய அனுமதி மறுத்ததற்காக முன்னாள் தொடக்க பள்ளி மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேற்கு லண்டனில் உள்ள தொடக்க பள்ளியின் மீது வழக்கு தொடர்ந்த நபர், சுமார் 25,000 பவுண்டுகள் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
2021ம் ஆண்டு முதல் குறித்த சிறுவன் U வடிவ சந்தன பசையால் இட்டு அதன் மேல் சிவப்பு குங்குமப் பொட்டு வைக்கும் Tilak-Chandloவை பள்ளிக்கு அணிந்து வந்துள்ளான்.
2025ம் ஆண்டின் பிற்பகுதியில் பள்ளி நிர்வாகம் சிறுவன் அணிய எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சிறுவனின் மதம் குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியதாகவும் சில நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதித்ததாகவும் அவனது தந்தை குற்றம் சாட்டுகிறார்.
மேலும் சிறுவன் அந்த பழக்கத்தை தொடர விரும்பினால் அவனை ஒரு மத பள்ளிக்கு மாற்றுமாறு கூட தாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

ஆனால் இதனை மறுத்துள்ள பள்ளி நிர்வாகம், தாங்கள் உணர்வுபூர்வமாக நடந்து கொண்டதாகவும் மாற்று வழிகளை வழங்கியதாகவும் கூறுகிறது.
இந்நிலையில் சமத்துவ சட்டம் 2010ன் கீழ் மத பாகுபாடு மற்றும் மனித உரிமைகள் சட்டம் 1998ன் கீழ் உரிமைகள் மறுக்கப்பட்டதாக இங்கிலாந்தின் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இதுகுறித்து ஆஷ்ரே சட்ட நிறுவனத்தின் இயக்குனரான அம்பிரிஷ் லிம்பாச்சியா, இந்த வழக்கு ஒரு குழந்தை மற்றும் ஒரு பள்ளியை தாண்டிய ஒன்று, பிரிட்டிஷ் கல்வியில் மத சுதந்திரம் மற்றும் சமத்துவம் குறித்த முக்கியமாக கேள்விகளை எழுப்புகிறது.
எந்த குழந்தையும் தனது மதம் மற்றும் கல்விக்கு இடையே ஒன்றை தெரிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படாது.
பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் மதிக்கப்படுவதற்கும் தங்கள் நம்பிக்கையை பின்பற்றுவதற்கும் சுதந்திரமாக இருப்பதற்கும் உரிமை உண்டு என தெரிவித்தார்.