இளைஞரை கடத்திய இலங்கையின் பெண் அரசியல்வாதி - அதிர்ச்சியை ஏற்படுத்திய பின்னணி
ஐக்கிய மக்கள் சக்தியின் மகளீர் அணி தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு மூன்று வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தெமட்டகொடை பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு இளைஞன் ஒருவரை கடத்திய குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளைஞரை கடத்திய பெண் அரசியல்வாதி
கொழும்பு தெமட்டகொடை பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மகளீர் அணி தலைவியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபரான அமில பிரியங்கர எனும் நபரே, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனு மீதான முந்தைய விசாரணைகளின் போது, இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேக நபர்களும் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில், அவர்களுக்கு இடைநிறுத்தப்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும், இந்த கடத்தல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என கூறப்படும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர, தான் குறித்த சம்பவம் இடம்பெற்ற தினம் மற்றுமொரு நிகழ்வில் பங்கேற்றதாகவும், இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லையெனவும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேரில் ஒருவர், தனது அனுமதியின்றி தனது சொந்த வாகனத்தை கடத்தல் நடவடிக்கைக்கு பயன்படுத்தியுள்ளதாகவும் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், அமில பிரியங்கர கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, ஹிருணிக்கா பிரேமச்சந்திர குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு மூன்று ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |