கனடா பொதுத்தேர்தல்... யாருக்கு வாய்ப்பு? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
கனடாவில் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், லிபரல் கட்சி முந்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ட்ரம்பின் மிரட்டல்களுக்கு மத்தியில்
லிபரல் கட்சியின் தற்போதைய தலைவரான பிரதமர் மார்க் கார்னி, முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இருந்து பொறுப்பேற்றதன் பின்னர் மார்ச் மாதம் தேர்தலை அறிவித்தார்.
இந்தப் போட்டியில் அவரது முக்கிய எதிரி கன்சர்வேடிவ் தலைவர் பியர் பொய்லிவ்ரே ஆவார். தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு கடந்த மாதம் கனடாவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டபோது, லிபரல் கட்சிக்கு 152 ஆசனங்களும், கன்சர்வேடிவ் கட்சிக்கு 120 ஆசனங்களும் இருந்தன.
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்புகள் மற்றும் மிரட்டல்களுக்கு மத்தியில் ஏழு மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் ஏற்கனவே சாதனை அளவில் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.
லிபரல் கட்சி முன்னிலை
தற்போது தேர்தல் முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்ட முடிவுகள் திங்கள்கிழமை இரவு அல்லது செவ்வாய்க்கிழமை அதிகாலையிலோ உள்ளூர் நேரப்படி வெளியாகும்.
நாட்டின் கிழக்குப் பகுதியில் கன்சர்வேடிவ்கள் அல்லது லிபரல்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றால், இரவோடு இரவாக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படலாம். ஆனால் கனேடிய மக்கள் சிறுபான்மை அரசாங்கத்தை அல்லது பெரும்பான்மை அரசாங்கத்தை தெரிவு செய்திருக்கிறார்களா என்பதைக் கண்டறிய அதிக நேரம் தேவைப்படலாம்.
வெளிவரும் தகவல்களின் அடிப்படையில் லிபரல் கட்சி 21 ஆசனங்களிலும் கன்சர்வேடிவ் கட்சி 10 ஆசனங்களிலும் முன்னிலையில் உள்ளனர். இதனால் தேர்தல் முடிவுகள் லிபரல் கட்சிக்கு சாதகமாக இருக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளது போலவே முடிவுகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |