பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரித்தானிய தம்பதியர் இவர்கள்தான்: புகைப்படங்கள் வெளியாகின
பிரான்சில் வாழ்ந்துவந்த பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தொடர்ந்து அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்பு
பிரித்தானியர்களான ஆண்ட்ரூ (Andrew Searle, 62) மற்றும் டான் (Dawn Searle, 56) தம்பதியர், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பிரான்சிலுள்ள தங்கள் இரண்டாவது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
தெற்கு பிரான்சிலுள்ள Les Pesquiès என்னுமிடத்தில் அந்த வீடு அமைந்துள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமையன்று, தம்பதியர் இருவரும் தங்கள் வீட்டில் உயிரற்ற நிலையில் கிடப்பது பக்கத்து வீட்டுக்காரர் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில், கொள்ளையர்கள் யாரோ அவர்களை கொலை செய்திருக்கலாம் என கருதப்பட்டது.
புதிய தகவல்கள்
ஆனால், அந்த பயங்கர சம்பவம் தொடர்பில் தற்போது அதிர்ச்சியை உருவாக்கும் புதிய தகவல்கள் வெளியாகிவருகின்றன.
ஆண்ட்ரூ, பிரித்தானியாவில் குற்றவாளி கும்பல்கள் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் நிதி விசாரணை அதிகாரியாக பணியாற்றிவந்துள்ளார்.
ஆகவே, பிரித்தானியாவிலிருந்து அவர்களைப் பின் தொடர்ந்துவந்த குற்றவாளி கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் தற்போது ஆண்ட்ரூ, டான் தம்பதியரைக் கொலை செய்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
சித்திரவதை செய்து கொலை
மேலும், ஆண்ட்ரூ சித்திரவதை செய்து கொல்லப்பட்டிருக்கக்கூடும் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.
காரணம், அவரது வாய்க்குள் துணி திணிக்கப்பட்டு, கயிற்றில் தொங்கவிடப்பட்டுள்ளார் ஆண்ட்ரூ.
ஆண்ட்ரூவின் மனைவி டானோ, தலையில் காயத்துடன், வீட்டு வாசலில் ஆடைகள் எதுவும் இல்லாமல் கிடந்திருக்கிறார். அவரைச் சுற்றிலும் நகைகள் சிதறிக்கிடந்திருக்கின்றன.
ஆரம்ப கட்ட பிரேத பரிசோதனையில், உயிரிழந்து கிடந்த இருவர் உடலிலும் துப்பாக்கிக் குண்டுகளோ, கத்திக்குத்து காயங்களோ இல்லை என தெரியவந்துள்ளது.
ஆக, அவர்கள் எப்படி கொல்லப்பட்டார்கள் என்பது தெரியவில்லை.
இதற்கிடையில், ஆண்ட்ரூ, ரஷ்யா போன்ற தடை செய்யப்பட்ட நாடுகளுடன், தடையை மீறி வர்த்தகம் செய்வோரையும் தீவிரவாதிகளுக்கு பணம் கொடுக்கப்படுவதையும் கண்டுபிடிக்கும் அபாயமான பணியில் ஈடுபட்டுவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |