நீங்கள் இந்த கடிதத்தை படிக்கும்போது நாங்கள் உலகை விட்டுச் சென்றிருப்போம்... இனப்படுகொலைக்குத் தப்பிய பெண் எடுத்த முடிவு
யூத இனப்படுகொலைக்குத் தப்பிய ஒரு பெண்ணும் அவரது கணவரும், சுவிட்சர்லாந்தில் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
யூத இனப்படுகொலைக்குத் தப்பிய சிறுமி
போலந்து நாட்டில் யூதக்குடும்பம் ஒன்றில் பிறந்தவரான ரூத் போஸ்னர் (Ruth Posner), தனது ஒன்பதாவது வயதில் தனது தந்தை உதவியுடன் நாஸிக்களின் சித்திரவதை முகாம் ஒன்றிலிருந்து தப்பினார்.
ஆனால், அவரது தந்தை, தாய், அத்தைமார், மாமாமார், உறவின் முறையார் என அனைவரும் நாஸிக்களால் கொல்லப்பட்டார்கள்.
போலந்து மொழியில் புலமை இருந்ததால், ஐரினா (Irena Slabowska) என்னும் பெயரில் மறைந்து வாழ்ந்துவந்த ரூத், தனது 13ஆவது வயதில் போர்க்கைதியாக ஜேர்மனிக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் யூதர் என்பது தெரியாவிட்டாலும், ஒரு போர்க்கைதியாக ஜேர்மனியில் சித்திரவதை செய்யப்பட்ட நிலையில், இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிரித்தானியா வந்தடைந்தார் ரூத்.
அதற்குப் பிறகு ஒரு நடிகையாக, நடனக்கலைஞராக, நடன இயக்குநராக, எழுத்தாளராக லண்டனிலேயே தன் கணவரான மைக்கேலுடன் (97) வாழ்ந்துவந்தார்.
துயர முடிவு குறித்து வெளியாகியுள்ள தகவல்
இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ரூத்தின் கணவரான மைக்கேலிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது.
அதில், தாங்கள் சுவிட்சர்லாந்துக்குச் சென்று மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலில், முன்கூட்டியே தங்கள் முடிவு குறித்து தெரிவிக்காததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ள ரூத், மைக்கேல் தம்பதியர், இந்த மின்னஞ்சலை நீங்கள் படிக்கும்போது நாங்கள் இந்த உலகை விட்டு கடந்து சென்றிருப்போம் என குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்த முடிவு தாங்களாக எடுத்தது என்றும், யாரும் தங்களை வற்புறுத்தவில்லை என்றும், நீண்ட காலம் வாழ்ந்துவிட்டோம், சுமார் 75 ஆண்டுகள் கணவன் மனைவியாக இணைந்து வாழ்ந்துவிட்டோம்.
கண் பார்வையும், கேட்கும் திறனும், சக்தியும் போய்விட்டபின் அது வாழ்க்கை அல்ல, வெறும் உயிருடன் இருப்பது மட்டுமே, அதை சரி செய்யவும் முடியாது, ஆகவேதான் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் ரூத், மைக்கேல் தம்பதியர். ரூத்துக்கு வயது 96.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |