சுவிஸில் தனிப்பட்ட வங்கி கணக்கு... 140 சொத்துக்கள்: போப் பிரான்சிஸ் தொடர்பில் வெளியாகும் தகவல்
வத்திக்கானில் ஒரு கார்தினல் உட்பட முக்கிய நிர்வாகிகள் சிலர் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி, விசாரணையை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் சுவிட்சர்லாந்தில் போப் பிரான்சிஸ் பெயரில் தனிப்பட்ட வங்கி கணக்கு இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஊழல் மற்றும் நிதி முறைகேடு தொடர்பில் கார்தினல் ஒருவர் சிக்குவதும், சில நிர்வாகிகள் ஒத்துழைப்பில் இது நடந்து வந்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்து விவாதங்களை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், போப் பிரான்சிஸ் தொடர்பில் முக்கிய தகவல்களை சுவிஸ் பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி காலம் முதற்கே, வத்திக்கான் நிர்வாகம் நிதி தொடர்பில் சுவிட்சர்லாந்துடன் இணைந்து செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வத்திக்கானுடன் தொடர்புடைய 140 சொத்துக்கள் சுமார் 91 மில்லியன் யூரோ மதிப்பில் தற்போதும் சுவிட்சர்லாந்தில் உள்ளதாக குறித்த பத்திரிகையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக லொசேன் மற்றும் ஜெனீவா பகுதியில் அவை பராமரிக்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது. இது மட்டுமின்றி போப் பிரான்சிஸ் பெயரில் UBS வங்கியில் தனிப்பட்ட கணக்கும் இருந்தது என்றும் 2015 முதல் 2020 வரையில் அவை பராமரிக்கப்பட்டு வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
இது இவ்வாறிருக்க, வத்திக்கான் முக்கிய நிர்வாகிகளின் பெரிய பகுதியினருக்கு வத்திக்கான் செயலகத்தால் முன்னெடுக்கப்படும் முதலீடுகள் பற்றி எதுவும் தெரியாது என்றே கூறப்படுகிறது.
தற்போது சமீபத்திய வரலாற்றில் வத்திக்கான் நிர்வாகிகள் தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், வெளிநாட்டு வங்கிகளில் தொடங்கப்பட்டுள்ள கணக்குகள் முடிக்கப்பட்டு, மொத்த நிதியையும் ரோமுக்கு மீட்டு வரும்படி போப் பிரான்சிஸ் உத்தரவிட்டுள்ளார்.
இருப்பினும், சுவிட்சர்லாந்தில் பராமரிக்கப்படும் சொத்துக்கள் அப்படியே தொடரும் என்றே தெரிய வந்துள்ளது.