பத்து நாட்களில் ஏழு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தும் கவலைப்படாத பிரான்ஸ்: உள்துறை அலுவலர்கள் கடுங்கோபம்
கடந்த பத்து நாட்களில், ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியில் ஏழு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்தும், பிரான்ஸ் எதையும் குறித்துக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை என்று கூறியுள்ள பிரித்தானிய உள்துறை அலுவலர்கள், தங்கள் கோபத்தை கடுமையான வார்த்தைகளால் வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், 54 மில்லியன் பவுண்டுகள் வாங்கியும், பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயந்தோரைக் கட்டுப்படுத்த முழுமையான பிரான்ஸ் திருப்தியளிக்கும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என உள்துறை அலுவலர்கள் முதன்முறையாக குரல் எழுப்பியுள்ளார்கள்.
54 மில்லியன் பவுண்டுகளை வாங்கிக்கொண்டு, வெறும் 220 பொலிசாரை மட்டும் கண் துடைப்புக்காக பிரான்ஸ் எல்லையில் பணிக்கு அனுப்பியுள்ளதாக பிரித்தானிய பத்திரிகை ஒன்று தெரிவிக்கிறது.
இதுவரை பிரித்தானிய உள்துறை அலுவலர்கள் இந்த விடயம் குறித்து பொறுமை காத்துவந்த நிலையில், தொடர்ந்து உயிரிழப்புகள் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து, முதன்முறையாக தற்போது பிரான்சுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள்.
மேலும், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், ஆங்கிலக்கால்வாயில் நடக்கும் உயிரிழப்புகள் குறித்தெல்லாம் கவலைப்படாமல், மீன்பிடி உரிமத்தின்மீதே கவனம் செலுத்திவருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
கடந்த புதன்கிழமை ஒரே நாளில் மட்டும் 853 புலம்பெயர்ந்தோர் 25 சிறு படகுகள் மூலம் பிரித்தானியாவை அடைந்துள்ளார்கள்.
கடந்த ஆண்டில் பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 8,410. இந்த ஆண்டில் இதுவரை பிரித்தானியாவுக்குள் நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை இப்போதே 21,051 ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.