முகத்தில் கரும்புள்ளியா? இவற்றை எளியமுறையில் போக்க இதோ சூப்பரான டிப்ஸ்!
நம்மில் பலருக்கும் அழகை கெடுக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பவைகளில் கரும் புள்ளியும் ஒன்றாகும். முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பதாலும் கரும்புள்ளிகள் ஏற்படுகின்றன.
முகப்பருக்கள் வந்தால் சிலர் அதை ஆரம்பத்திலேயே கிள்ளி விடுவார்கள். இதனால் பரு சிதைந்து நாளடைவில் கரும்புள்ளிகளாக மாறிவிடுகின்றன. கரும்புள்ளிகளை நீக்குவதற்கு என பல கிரீம்கள் இருந்தாலும் அவற்றில் இரசாயன தன்மைகள் அதிகம் இருக்கும்.
இவை சில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடியவை. கரும்புள்ளிகளை நீக்குவதற்கு பக்கவிளைவு இல்லாத இயற்கை முறையே நிரந்தர தீர்வாக அமையும்.
அந்தவகையில் முகத்தை அசிங்கமாக காட்டும் கரும்புள்ளியை எப்படி எளிய முறையில் நீக்கலாம் என்பதை இங்கு பார்ப்போம். .
- உருளைக்கிழங்கை வட்டவடிவில் வெட்டி முகத்தில் முழுவதுமாக தேய்க்கலாம். உருளைக்கிழங்கை தோல் நீக்கி வெட்டி சாறு பிழிந்தால் சாறு கிடைக்கும். அதை பஞ்சில் தொட்டும் முகம் முழுக்க தடவலாம். நேரம் இருந்தால் உருளைக்கிழங்கு தோல் சீவி மிக்ஸியில் அடித்து வைட்டமின் ஈ உடன் கலந்து முகத்தில் தடவி மந்தமான நீரில் கழுவி எடுக்கலாம்.
- கற்றாழை சரும பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து. கற்றாழையை நீரில் அலசி உள்ளிருக்கும் ஜெல் போன்ற பகுதிகளை தனியாக எடுத்து முகத்தில் தேய்த்து வட்ட வடிவில் மசாஜ் செய்யவும். இது சருமத்தில் இருக்கும் காயங்களை ஆற்றும். தொடர்ந்து 15 நாட்கள் வரை செய்து வந்தால் கரும்புள்ளிகள் காணாமல் போகும்.
- நான்கு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சம அளவு தண்ணீரில் வைத்து கலக்கவும். இதில் சுத்தமான காட்டனை ஊறவைத்து முகம் முழுக்க தடவி விடவும். பிறகு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து 15 நாட்கள் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் வித்தியாசத்தை உணர்வீர்கள். சருமம் வறட்சியாக இருந்தால் எலுமிச்சை சாறு கலவையோடு ஆலிவ் எண்ணெய் அல்லது வைட்டமின் ஈ எண்ணெய் பயன்படுத்தலாம்.
- ஆப்பிள் சீடர் வினிகருடன் சம அளவு நீர் கலந்து விடுங்கள். இரண்டு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் உடன் இரண்டு டீஸ்பூன் தண்ணீரை கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் டோனர் போல் உபயோகியுங்கள். பஞ்சில் தொட்டு முகம் முழுவதும் ஒற்றி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறைய கூடும்.
- ஓட்ஸ் பயன்படுத்தும் போது அது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், வடுக்களை போக்க செய்கிறது. கரும்புள்ளிகளை கொண்டிருந்தால் ஓட்ஸ் பயன்படுத்தும் போது ஒரு டீஸ்பூன் ஓட்ஸ் உடன் தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும் 20 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் கரும்புள்ளிகள் படிப்படியாக குறைய கூடும்.
- சந்தனப்பொடியை வாங்கி முகத்தில் பயன்படுத்தி வந்தால் நாளடைவில் முகம் சந்தன நிறத்தில் கறையில்லாமல் அழுக்கில்லாமல் இருக்கும். வறண்ட சருமம் கொண்டிருப்பவர்கள் சந்தனத்துடன் சிறிது பால் சேர்த்து கலந்து பயன்படுத்தலாம். சந்தனத்துடன் வைட்டமின் ஈ எண்ணெய் கலந்தும் பயன்படுத்தலாம். இதனால் கரும்புள்ளிகள் வேகமாக மறையகூடும். கரும்புள்ளிகள் மறையும் வரை இதை செய்து வரலாம்.
- கொஞ்சம் மஞ்சளை எடுத்து அதை நீர் விட்டு குழைத்து அப்படியே முகத்தில் தடவி கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி எடுக்கவும். கரும்புள்ளிகள் இலேசாக தெரியும் போதே இதை பயன்படுத்த தொடங்கி விட வேண்டும். மஞ்சள் ஒவ்வாமை வராமல் இருக்க தயிர் அல்லது காய்ச்சாத பால் சேர்த்து பயன்படுத்தலாம். விரலி மஞ்சளாக இருந்தால் நல்லது.
- ஜாதிக்காயை வாங்கி பொடி செய்து இரண்டு சிட்டிகை எடுத்து பாலில் கலந்து முகத்தில் பூசி நன்றாக உலர்ந்ததும் முகத்தை கழுவி எடுங்கள். ஜாதிக்காய்க்கு மாற்றாக ஜாதிக்காய் எண்ணெயும் வாங்கி பயன்படுத்தலாம். இரண்டு துளி ஜாதிக்காய் எண்ணெயுடன் தேங்காய் எண்ணெய் கலந்து முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் மறைய தொடங்கும்.
- கொத்துமல்லியை அரைத்து சாறு எடுத்து முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மீது மட்டும் அல்லாமல் முகம் முழுக்க தடவி உலர வைத்து காயவிட்டு வந்தால் முகம் இளமையாக காட்சி அளிக்கும். கொத்துமல்லியுடன் வெள்ளரிக்காயை சேர்த்து அரைத்து சாறு எடுத்து காட்டனில் நனைத்தும் முகம் முழுக்க தடவி வரலாம். வெள்ளரிக்காய் சிலிகா நிறைந்தவை என்பதால் முகத்தில் பொலிவு கூடும்.