வீட்டை புதுப்பிக்கும்போது சுவரில் மறைந்திருந்த பெட்டி: பிரான்ஸ் தம்பதியருக்கு அடித்த அதிர்ஷ்டம்
பிரான்சில் தங்கள் வீட்டை புதுப்பித்த தம்பதியருக்கு பெரும் புதையல் ஒன்று கிடைத்துள்ளது.
மேற்கு பிரித்தனியிலிருக்கும் வீடு ஒன்றை புதுப்பிக்கும் பணியின்போது, பணியாட்கள் செங்கல்களுக்கு நடுவே ஒரு உலோகப்பெட்டியைக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அதை திறந்து பார்க்கும்போது அதற்குள் தங்க நாணயங்கள் இருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்துள்ளார்கள் அனைவரும். சில நாட்களுக்குப் பின்பு, மேலும் ஒரு இடத்தில் ஒரு பைக்குள் இன்னும் சில தங்க நாணயங்கள் கிடைக்க, அவர்களுக்கு மொத்தமாக 239 தங்க நாணயங்கள் கிடைத்தன.
அந்த தங்க நாணயங்கள் தற்போது ஏலம் விடப்பட்டுள்ளன. அவை 250,000 யூரோக்கள் முதல் 300,000 யூரோக்கள் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஏலம் கேட்டவர்கள் தாறுமாறாக விலையை உயர்த்த, அந்த நாணயங்கள் ஒரு மில்லியன் யூரோக்களுக்கும் அதிகமாக விலை போயிருக்கின்றன.
அந்த தொகையை வீட்டின் உரிமையாளர்களும், பணியாட்களும் தங்களுக்குள் பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளார்கள்.
பிரான்ஸ் சட்டப்படி, இதுபோல் கிடைக்கும் புதையல் எல்லாம் அரசுக்கு சொந்தமாகும். ஆனால், 2016க்குப் பிறகு வாங்கப்பட்ட நிலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட புதையல்களுக்குத்தான் இந்த சட்டம் பொருந்தும்.
ஆனால், இந்த வீட்டைப் பொருத்தவரை, அதன் உரிமையாளர்கள் அதை 2012இலேயே வாங்கிவிட்டதால், அந்த புதையலை அவர்களே எடுத்துக்கொள்ளலாம் என்பதால் வீட்டைப் புதுப்பிக்கப்போய் இனி புதிதாக வீடே வாங்கிவிடும் அளவுக்கு அதிர்ஷ்டம் உண்மையாகவே கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டியிருக்கிறது அந்த தம்பதியருக்கு.