ஜேர்மனியில் 2023இல் வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ள வீட்டு வாடகை
ஜேர்மனியின் பெரிய நகரங்களில், 2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், வரலாறு காணாத அளவில் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஆய்வில் வெளியான தகவல்கள்
2023ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான முதல் காலாண்டில், ஜேர்மனியில், ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாடகை 7.4 சதவிகிதமும், புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் வாடகை 7.7 சதவிகிதமும் அதிகரித்துள்ளது என்கிறது, Immoscout 24 என்னும் ரியல் எஸ்டேட் தளம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள்.
முந்தைய ஆண்டைக் கணக்கிட்டால், ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் வாடகை 12 சதவிகிதமும், புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் வாடகை 20 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
Photo: picture alliance/dpa | Marijan Murat
எந்தெந்த நகரங்களில் வாடகை மிக அதிகம் உயர்ந்துள்ளது?
பெர்லின் மற்றும் Stuttgartஇல்தான் புதிய குடியிருப்புகளின் வாடகைகள் இதுவரை இல்லாத அளவில் சுமார் 8 மற்றும் 9 சதவிகிதம் உயர்ந்துள்ளன.
பெர்லினைப் பொருத்தவரை, ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் குடியிருப்புகளின் வாடகை, ஒரு சதுர மீற்றருக்கு 12.56 யூரோக்களும், Munichஇல் வாடகை மிக அதிகமாக, ஒரு சதுர மீற்றருக்கு 18.44 யூரோக்களும் உயர்ந்துள்ளது.
ஏற்கனவே கட்டப்பட்டிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் சராசரி வாடகை உயர்வைப் பார்த்தால், மொத்த நாட்டிலும், அது 8.01 யூரோக்கள் உயர்ந்துள்ளது.
பெர்லினைப் பொருத்தவரை, புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் வாடகை, ஒரு சதுர மீற்றருக்கு 17.64 யூரோக்களும், Munichஇல் வாடகை ஒரு சதுர மீற்றருக்கு 22.30 யூரோக்களும் உயர்ந்துள்ளது.
புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளின் வாடகை, நாடு முழுவதும் சதுர மீற்றர் ஒன்றிற்கு 11.01 யூரோக்கள் உயர்ந்துள்ளது.