அவுஸ்திரேலியாவில் இரகசிய பிரசவத்திற்கு பிறகு இறந்த குழந்தையுடன் மீட்கப்பட்ட பெண்
அவுஸ்திரேலியாவில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணொருவர் மீட்கப்பட்ட நிகழ்வு தொடர்பில், குடும்பத்தினர் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
புகலிடமாக மாறிய பகுதி
நியூ சவுத் வேல்ஸில் உள்ள வாக்கா வாக்கா நகரின் Murrumbidgee நதி அருகே தற்காலிக வீடற்றோர் முகாம் உள்ளது.

வீட்டுவசதி நெருக்கடிக்கு இடையே தவிக்கும் மக்களுக்கு இப்பகுதி ஒரு புகலிடமாக மாறியுள்ளது என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
இங்குள்ள ஓர் கூடாரத்தில் பெண்ணொருவர் இரகசியமாக இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
அவரது துணை அவசர உதவி எண்ணை அழைத்ததைத் தொடர்ந்து, வாக்கா கடற்கரைக்கு அவசர சேவைகள் விரைந்தன.
37 வயதான பெண்ணொருவர் அங்கு ஒரு குழந்தையின் சடலம் மற்றும் உயிருடன் மற்றொரு குழந்தையுடன் காணப்பட்டார்.
இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த அவருக்கு, மருத்துவ உதவியாளர்கள் அங்கேயே சிகிச்சை அளித்துள்ளனர்.
பின்னர் சிகிச்சை அளிக்கப்பட்ட குழந்தையும், தாயும் வாக்கா பேஸ் மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்லப்பட்டனர்.
சிகிச்சைக்கு பின் அவர் வெளியேற்றப்பட்ட பின், உயிர் பிழைத்த குழந்தை சிட்னியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. அப்பெண் தனது துணையுடன் சுமார் ஐந்து மாதங்களாக அந்த முகாமில் வசித்து வந்ததாக தெரிகிறது.
அவருக்கு அங்கு வசிக்காத வேறு குழந்தைகளும் உள்ளனர்; மேலும், அவர் பல ஆண்டுகளாக ஹோம்ஸ் NSW உடன் தொடர்பில் இருந்ததாகவும், அந்தப் பிராந்திய நகரத்தில் சமூக வீட்டு வசதிக்காக நூற்றுக்கணக்கானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்ததாகவும் தெரிகிறது.
பரவி வரும் பொய்களுக்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில், குறித்த பெண்ணின் துயருற்ற குடும்பத்தினர் இணையத்தில் பரவி வரும் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தங்கள் மௌனத்தை கலைத்துள்ளனர்.
இணையத்தில் ஊகங்கள் பரவியதாலும், போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கம் குறித்த கூற்றுகளாலும் தாயின் உறவினரான பெக் லீ, தவறான வதந்திகளை முறியடிக்க சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
அதில், 'நீங்கள் அனைவரும் பேசிக்கொண்டிருப்பது என் உறவினரைப் பற்றித்தான். நீங்கள் தொடர்ந்து அனுமானங்களை செய்து பொய்களைப் பரப்புவதற்கு முன்பு, இதைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அவரைப் பற்றியோ அல்லது அவரது சூழ்நிலையைப் பற்றியோ தெரியாது' என்றார்.
மேலும், எங்கள் குடும்பத்திற்கு இந்தக் கர்ப்பத்தைப் பற்றித் தெரியவே தெரியாது. ஆனால் நான் ஒன்றை மிகத் தெளிவாகக் கூறுகிறேன். அவருக்கு போதைப்பொருள் அல்லது மதுப் பழக்கத்தில் ஒருபோதும் சிக்கல்கள் இருந்ததில்லை. உங்களில் சிலர் உருவாக்கும் கதைகள் முற்றிலும் உண்மையல்ல எனவும் தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |