பிரித்தானியாவில் அதிகரிக்கும் வீடற்றவர்கள் எண்ணிக்கை: அதிர்ச்சி தரும் புள்ளி விவரங்கள்
பிரித்தானியாவில் அதிகரித்து வரும் உணவு மற்றும் எரிசக்தி பொருள்களின் விலை உயர்வால் 2024ம் ஆண்டில் சுமார் 66,000 நபர்கள் வீடற்றவர்களாக அதிகரிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் வரும் 2024 ஆம் ஆண்டில் சுமார் 66,000க்கும் மேற்பட்டோர் வீடற்றவர்களாக திரியும் நிலைமை ஏற்படும் எனவும், இக்கட்டான நிலையில் வாழும் மக்களின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரிக்கும் என housing charity Crisis மற்றும் ஹெரியட்-வாட் பல்கலைக்கழகம் இணைந்து வெளிட்ட ஆண்டுக்குறிப்பில் தெரியவந்துள்ளது.
வீடற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் 8000 நபர்கள் நெருக்கடி நிலைக்கும், 9000 நபர்கள் தங்களுக்கு ஒவ்வாத வாழ்கை முறைக்கும் தள்ளப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையானது கடந்த கொரோனா காலத்தில் பிரித்தானிய அரசு "everyone in" என்ற திட்டத்தின் மூலம் வீடற்றவர்களின் மீது எடுத்த அக்கறை நடவடிக்கைகளால் கடந்த 2020 ஆம் ஆண்டு 203,400 என்ற அளவில் குறைந்ததாகவும், அது கடந்த 2019ம் ஆண்டைவிட 5 % குறைவு எனவும் தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போது உணவு மற்றும் எரிசக்தி பொருள்களின் விலை உயர்வு மற்றும் கொரோனா விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் பின்வாங்குதல் போன்ற காரணத்தால் இந்த எண்ணிக்கை 2024 ஆம் ஆண்டு 270,000 என்றும் 2036 ஆம் ஆண்டு 300,000 உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவில் அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் நடுத்தர குடும்பம் ஒன்று தங்கள் வருவாயில் சுமார் 54% கட்டணம் செலுத்துவதில் கழியும் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கம் வீடற்றவர்களை பாதுகாப்பதற்காக 316 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது குறிப்பிட்டதக்கது.