கனவு நிறைவேறாமல் போனால்... பிரித்தானிய சேன்ஸலர் நாட்டைவிட்டு வெளியேறலாம்
பிரித்தானிய பிரதமராகும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டால் சேன்ஸலர் ரிஷி சுனக் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அவர் அமெரிக்காவின் கலிபோர்னியா சென்றுவிடலாம் என அவரது நண்பர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
கலிபோர்னியாவின் Santa Monica பகுதியில் 5.5 மில்லியன் பவுண்டுகள் பெருமதியான வீடு ஒன்று ரிஷி சுனக் பெயரில் உள்ளது. பிரித்தானியாவில் பிரதமராகும் அவரது முயற்சிகள் தோல்வியில் முடிந்தால், நாட்டைவிட்டு வெளியேறி Silicon Valley-ல் பணிக்கு செல்லவும் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார்.
சேன்ஸலர் ரிஷி சுனக் மீது விசாரணைக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் உத்தரவிட்டுள்ள நிலையிலேயே, அவரது எதிர்கால திட்டம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
தமக்கான வாய்ப்புகளை எதிர்பார்த்து இன்னொரு பத்தாண்டுகள் பிரித்தானிய பாராளுமன்றத்தில் குப்பைகொட்டும் நபரல்ல ரிஷி சுனக் எனக் கூறும் அவரது நண்பர், ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராகப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்டால், அதன் பின்னர் அவர் வெளியேறிவிடுவார் என தெரிவித்துள்ளார்.
ரிஷி சுனக்கின் இந்தியரான மனைவியின் வரி ஏய்ப்பு விவகாரம் பொதுவெளியில் விவாதிக்கப்படும் முன்னர் வரையில், அடுத்த பிரதமர்கள் பட்டியலில் முன்வரிசையில் இடம்பெற்றிருந்தார் ரிஷி சுனக்.
தமது மனைவி விவகாரத்தில் சட்டத்தை உறுதியாக பின்பற்றியுள்ளதாக கூறும் ரிஷி சுனக், தமது மனைவியின் non-dom நிலை எவ்வாறு கசிந்து, தமக்கு அரசியல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, பிரதமர் போரிஸ் ஜோன்சன் தமது அரசின் சேன்ஸலர் மீது முழு நம்பிக்கை வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.