கனடா கொரோனாவின் மீதே கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் நிலையில் அமைதியாக பரவிக்கொண்டிருக்கும் ஒரு பயங்கர நோய்
கனடாவின் கவனம் முழுவதும் கொரோனாவின்மீதிருக்கும் நிலையில், மற்ற பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் விடப்படுவதால், மற்றொரு பயங்கர நோய் கனடாவில் பரவிக்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த தகவலை ஆல்பர்ட்டாவின் தமைமை மருத்துவ அலுவலரான Dr. Deena Hinshaw வெளியிட்டுள்ளார். குறிப்பாக, ஆல்பர்ட்டாவில் சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நோய் தற்போது மிக பயங்கரமாக பரவிவருவது தெரியவந்துள்ளது.
சிபிலிஸ் என்று அழைக்கப்படும் அந்த பால்வினை நோய், 2000இல் 17 பேருக்கு மட்டுமே இருந்தது. 2020இல் அது 2,509 பேரை தொற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆன்டிபயாட்டிக்குகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இருந்த அளவுக்கு மோசமாக இந்த நோய் பரவியுள்ளது என்கிறார் எட்மண்டன் தொற்றுநோய் சிறப்பு நிபுணரான Dr. Ameeta Singh.
இந்த சிபிலிஸ் என்பது, ஏற்கனவே குறிப்பிட்டபடி ஒரு பால்வினை நோய், அதாவது பாலுறவின் மூலம் பரவும் நோய். சமூக ஊடகங்கள் மூலம் டேட்டிங் முதலானவை அதிகரிக்கத் தொடங்கியதும் இதற்கு ஒரு காரணம் என்கிறார் Dr. Ameeta Singh.
குறிப்பாக போதைப்பழக்கம் உடையவர்கள் கட்டுக்கடங்காமல் பாதுகாப்பின்றி பாலுறவு வைத்துக்கொள்வதும் இந்நோய் பெருமளவில் பரவ ஒரு காரணமாகும்.
இதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், வறுமை, வீடின்றி தெருவில் வாழ்தல் மற்றும் போதைக்கு அடிமையாகும் பெண்கள் இந்நோயின் பாதிப்புக்கு ஆளாகும் நிலையில், அவர்கள் கர்ப்பமாகும்போது, இந்த நோய் அந்த சிசுவையும் பாதித்து கருச்சிதைவு வரை கொண்டு சென்றுவிடும் அபாயம் உள்ளது என்பதுதான்!
இன்னொரு விடயம், பிரச்சினை ஆல்பர்ட்டாவில் மட்டுமல்ல, கனடா முழுவதிலும், அமெரிக்கா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் இந்த நோய் பரவிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.