பிரித்தானியாவிலிருந்து ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப்படும் புலம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட உள்ள ஹொட்டல் இதுதான்...
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பி தங்கவைக்கும் முயற்சியில் பிரித்தானியா தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அவர்கள் தங்கவைக்கப்பட உள்ள ஹொட்டல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
இம்மாதம், 100 சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார்கள்.
அவர்களுக்கு அது குறித்த நோட்டீஸ் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. இப்போது, அவர்கள் விரும்பினால் தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிச் சென்றுவிடலாம், அல்லது அவர்கள் ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தப்படுவார்கள் என பிரித்தானிய உள்துறை அலுவலகம் அவர்களுக்கு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், முதல் கட்டமாக ருவாண்டாவுக்கு நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோரில் சிலர், ருவாண்டாவின் தலைநகரான Kigali நகரில் அமைந்துள்ள Desir Resort Hotel என்னும் ஹொட்டலில் தங்கவைக்கப்பட உள்ளார்கள்.
அந்த ஹொட்டல், நீச்சல் குளம், ஸ்பா, இலவச வைஃபை, ஃப்ளாட் ஸ்கிரீன் தொலைக்காட்சி, டென்னிஸ் விளையாட்டு மைதானம், உடற்பயிற்சிக்கூடம் மற்றும் கோல்ப் மைதானம் ஆகியவை அடங்கிய ஒரு பெரிய ஹொட்டல் ஆகும்.
பிரித்தானியாவிலிருந்து தாங்கள் நாடுகடத்தப்படுவதைக் குறித்து புலம்பெயர்ந்தோர் கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், தங்கள் ஹொட்டலில் புலம்பெயர்ந்தோர் தங்கவைக்கப்பட உள்ளதற்காக, ஹொட்டல் நிர்வாகம் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
இருக்காதா பின்னே, அந்த புலம்பெயர்ந்தோருக்கான ஹொட்டல் கட்டணத்தை செலுத்தப்போவது பிரித்தானிய அரசாயிற்றே!
ஆக, ருவாண்டாவைப் பொருத்தவரை, இந்த புலம்பெயர்ந்தோர் அங்கு நாடுகடத்தப்படுவதால் அந்நாட்டுக்கு வருவாய் என்பதால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஆனால், புலம்பெயர்ந்தோரோ, தங்கள் புகலிடக்கோரிக்கை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் தாங்கள் பிரித்தானியாவுக்கு திரும்பி வரமுடியாது, தாங்கள் ருவாண்டாவில்தான் வாழவேண்டியிருக்கும் என்பதையும், தங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலோ, தாங்கள் எந்த நாட்டிலிருந்து தப்பியோடி வந்தோமோ, அந்த நாட்டுக்கே நாடுகடத்தப்படுவோம் என்பதாலும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.