இன்றைய இளைய தலைமுறையினரால் ஏன் பணக்காரர்கள் ஆகமுடிவதில்லை?
இரண்டாம் உலகப்போரின் முடிவுக்குப் பின், 1946 முதல் 1964 வரை, 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்தவர்கள், பேபி பூமர் தலைமுறை (Baby boomers), அல்லது பூமர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.
அந்த தலைமுறையினர் பெரும் செல்வந்தர்களாக வாழ்ந்த நிலையில், இன்றைய இளைய தலைமுறையால் ஏன் அவர்களைப்போல பணக்காரர்கள் ஆக முடியவில்லை?
இளைய தலைமுறையினரால் ஏன் பணக்காரர்கள் ஆகமுடிவதில்லை?

அமெரிக்காவைப்பொருத்தவரை, பேபி பூமர் தலைமுறையினர், இன்று 85 ட்ரில்லியன் டொலர்கள் அளவுக்கு சொத்துவைத்துள்ளார்கள்.
அந்த தலைமுறையினர்தான் அமெரிக்காவிலேயே மிகப்பெரிய பணக்காரர்களாகத் திகழ்கிறார்கள்.
விடயம் என்னவென்றால், அமெரிக்கப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்துகொண்டிருந்த நேரத்தில் பூமர்கள் தொழிலாளர் சந்தையில் நுழைந்தார்கள்.
உற்பத்தி அதிகரித்துக்கொண்டிருந்தது, ஊதியங்கள் அதிகமாகிக்கொண்டிருந்தன, நடுத்தர மக்கள் வலிமையானவர்களாக இருந்தார்கள்.
1980கள், 90களிலும், அதற்குப் பின் பெரும் பொருளியல் நிலைத் தேக்கம் என்னும் Great Recession முடிவடைந்த பின்னும், வருவாயின் உச்சத்திலிருந்தார்கள் அவர்கள்.
அதுமட்டுமல்ல, அப்போது கல்வி மற்றும் மருத்துவத்துக்கான செலவுகள் குறைவு.

ஆனால், இன்றைய இளைய தலைமுறை அப்படியல்ல. தாங்கள் வேலைக்குச் செல்லும் ஆரம்ப காலகட்டத்திலேயே பொருளாதார ரீதியில் பல அதிர்ச்சிகளை சந்திக்கிறார்கள் அவர்கள்.
2008 பொருளாதார நெருக்கடி, அதைத்தொடர்ந்த காலகட்டம், கோவிட் காலகட்டம் என இளைய தலைமுறைக்கு அடிமேல் அடி!
கல்விக்காக பெரும் செலவு, குழந்தைகளுக்கான செலவு, பெரிய அளவில் அதிகரிக்காத ஊதியங்கள் என, பூமர்களை ஒப்பிடும்போது இவர்களுக்கு தங்கள் 30 வயதுகளில் இரண்டு மடங்கு கடன் உள்ளது.
பூமர்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு கிடைத்த பெரும் தொகையான ஓய்வூதியத்தை பலர் முதலீடு செய்தார்கள். இன்று ஓய்வூதியம் என்னும் முறையே பல நாடுகளில் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது.
அதேபோல, வீடுகள். பூமர்கள் வீடு விலையும், வீட்டுக் கடனும் குறைவாக இருக்கும்போதே வீடு வாங்கினார்கள். அவர்களுக்கு வட்டி வீதமும் குறைவாக இருந்தது.
இன்னொரு விடயம், நேரம்! ஆம், பூமர்களுக்கு 30 வயது இருக்கும்போது வீடு விலை 42,800 டொலர்கள். இன்று, 411,000 டொலர்கள்!
இன்று முதன்முறையாக வீடு வாங்கும்போது இந்த தலைமுறையினருக்கு 40 வயது ஆகிவிடுகிறது.
ஆக, பூமர்களைப்போல் இல்லாமல், இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஊதிய உயர்வு மெதுவாக உள்ளது, கல்வி மற்றும் மருத்துவத்துக்கான செலவு எக்கச்சக்கம், வாடகைகள் உயர்ந்துகொண்டே செல்கின்றன. ஆகவேதான் பூமர்களைப்போல இந்த இளம் தலைமுறையினரால் எளிதாக பணக்காரர்கள் ஆகமுடிவதில்லை!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |