மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: சிக்கியது எப்படி?
இந்தியாவின் பெங்களூருவில், மருத்துவர் ஒருவரின் மனைவி திடீரென மரணமடைந்த நிலையில், அது இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில், அது இயற்கை மரணம் அல்ல என தெரியவந்துள்ளதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது, மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீரென மரணமடைந்த மருத்துவர் மனைவி
பெங்களூருவிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிபவர் மஹேந்திர ரெட்டி (32). அவரது மனைவி, மருத்துவர் கிருத்திகா ரெட்டி (23).
தம்பதியருக்கு கடந்த ஆண்டு, அதாவது, 2024ஆம் ஆண்டு மே மாதம்தான் திருமணம் ஆனது.
இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி, உடல் நலம் பாதிக்கப்பட்ட கிருத்திகா திடீரென உயிரிழந்தார்.
உண்மையை மறைத்து திருமணம்
கிருத்திகாவுக்கு நீண்ட காலமாக வயிற்று உபாதைகளும், வளர்சிதை மாற்றப் பிரச்சினைகளும் இருந்துள்ளன.
அவற்றை மறைத்து அவரது பெற்றோர் கிருத்திகாவை மஹேந்திர ரெட்டிக்கு திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள்.
மனைவி வீட்டார் உண்மையை மறைத்துவிட்டதை அறிந்த மஹேந்திர ரெட்டிக்கு மனவருத்தம் ஏற்பட்டுள்ளது.
மாதக்கணக்கில் கசப்பும் வெறுப்பும் தொடர, கவனமாக திட்டமிட்டு மனைவிக்கு விஷம் கொடுக்க முடிவு செய்துள்ளார் மஹேந்திர ரெட்டி.
விஷத்தையே மருந்தாக...
ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, கிருத்திகாவுக்கு வழக்கமாக ஏற்படுவதுபோல வயிற்றுப்பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
மனைவியை பரிசோதித்த மஹேந்திர ரெட்டி, அவருக்கு குளூக்கோஸ் ஏற்றும் குழாய் (intravenous, IV) மூலம் மருந்தொன்றைக் கொடுத்துள்ளார்.
மறுநாள் மனைவியை அவரது தாய் வீட்டுக்கு அழைத்துச் சென்ற மஹேந்திர ரெட்டி, அன்றும் அதே மருந்தை குழாய் மூலம் ஏற்றியுள்ளார்.
23ஆம் திகதி, ஊசி குத்தப்பட்டுள்ள இடத்தில் வலி இருப்பதாக கிருத்திகா கூறியும், அன்று இரவு மீண்டும் ஒரு டோஸ் மருந்தை மனைவி உடலில் ஏற்றியுள்ளார் மஹேந்திர ரெட்டி.
மறுநாள், அதாவது, ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி காலை, கிருத்திகா சுயநினைவிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஒரு அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தும், தன் மனைவிக்கு உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை (CPR) செய்யாத மஹேந்திர ரெட்டி, மனைவியை அருகிலுள்ள மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு சென்றுள்ளார்.
அங்கு கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்கள்.
கிருத்திகாவின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது உடலுக்கு உடற்கூறாய்வு தேவையில்லை என்றும், தன் மனைவியின் உடலை தன் ஊரில்தான் தகனம் செயவேண்டும் என்றும் அடம்பிடித்துள்ளார் மஹேந்திர ரெட்டி.
ஆனால், கிருத்திகாவின் அக்காவான நிகிதா ரெட்டி அதற்கு சம்மதம் தெரிவிக்க மறுத்துள்ளார்.
சிக்கியது எப்படி?
கிருத்திகாவின் மரணத்தில் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவும் இல்லை, அல்லது விவரிக்க இயலாத இயற்கை மரணம் என அந்த வழக்கு முடித்துவைக்கப்பட்ட நிலையில், கிருத்திகாவின் அக்காவான மருத்துவர் நிகிதா ரெட்டி, தன் தங்கையின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, கிருத்திகா மரணமடைந்த மருத்துவமனையை, தன் தங்கை மரணம் தொடர்பில் மருத்துவ - சட்ட வழக்கு (Medico - Legal Case) தொடரும்படி தூண்டியுள்ளார் நிகிதா.
அதன்படி உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்ட கிருத்திகா உடல் உள்ளுறுப்புகளில் Propofol என்னும் ரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த Propofol, மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சையின்போது மட்டுமே மயக்க மருந்தாக பயன்படுத்தப்படும் ரசாயனம் ஆகும்.
கிருத்திகாவின் கணவரான மஹேந்திர ரெட்டியும் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர்.
கிருத்திகாவின் பெற்றோர் வீட்டில் வைத்து கிருத்திகாவுக்கு மருந்து ஏற்றுவதற்காக மஹேந்திர ரெட்டி பயன்படுத்திய உபகரணங்களை ஏற்கனவே பொலிசார் கைப்பற்றிவைத்திருந்த நிலையில், ஆய்வில் அந்த உபகரணங்களிலும் Propofol இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆக, கிருத்திகா உடல் நலம் பாதிக்கப்பட்ட ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை, அவருக்கு சிகிச்சையளிப்பதாகக் கூறி, இந்த Propofolஐத்தான் மனைவியின் உடலில் ஏற்றியுள்ளார் மஹேந்திர ரெட்டி.
அளவுக்கு அதிகமாக Propofol ஏற்றப்பட்டதால், பரிதாபமாக பலியாகியுள்ளார் கிருத்திகா என்கிறார்கள் பொலிசார்.
கிருத்திகா உயிரிழந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு, கர்நாடகா மாநிலத்தில், பெங்களூரூவிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள உடுப்பி நகரிலுள்ள மணிப்பால் என்னுமிடத்தில் பொலிசார் தற்போது மஹேந்திர ரெட்டியைக் கைது செய்துள்ளார்கள்.
கிருத்திகாவின் அக்கா எழுப்பிய சந்தேகத்தால் சிக்கிக்கொண்ட மஹேந்திர ரெட்டி, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |