பிரித்தானியாவில் முதல் Omicron நோயாளி உயிரிழந்தது எப்படி? சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஒரு விடயம்
Omicron மரபணு மாற்ற கொரோனா வைரஸுக்கு பலியான முதல் நபர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர் என்ற விடயம் வெளியாகியுள்ள நிலையில், அவர் எப்படி இறந்தார் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு லண்டனிலுள்ள தடுப்பூசி மையம் ஒன்றிற்குச் சென்றிருந்த பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், Omicron வைரஸால் நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், ஒரு நோயாளி Omicron வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
போரிஸ் ஜான்சன் கூறும்போது, ’sadly at least one patient has been confirmed to have died with Omicron’ என்று கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து, பிரித்தானிய அரசு தேவையில்லாமல் மக்களை அச்சுறுத்துவதைத் தடுக்கும் விதமாக, Omicron வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் நோயாளி குறித்த விவரங்களை வெளியிடவேண்டும் என மருத்துவர் ஒருவர் கோரியுள்ளார்.
அந்த நோயாளி Omicron வகை கொரோனாவால் உயிரிழந்தாரா, அல்லது Omicron வகை கொரோனாவுடன் உயிரிழந்தாரா (அதாவது ஏதாவது காரணத்தால் உயிரிழந்த ஒரு நோயாளிக்கு Omicron வகை கொரோனா தொற்றும் இருந்ததா) என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பும் மருத்துவத்துறை பேராசிரியரும், புற்றுநோயியல் நிபுணருமான Karol Sikora என்பவர், அந்த நோயாளி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாரா, அல்லது பேருந்தில் அடிபட்டு அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
போரிஸ் ஜான்சன், Omicron வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டதாக கூறப்படும் நோயாளியின் வயது என்ன, அவருக்கு வேறு ஏதாவது உடல் நல பிரச்சினைகள் இருந்தனவா, அவர் உயிரிழப்பதற்கு கொரோனா முதன்மைக் காரணமாக இருந்ததா அல்லது துணைக் காரணமாக இருந்ததா என எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.
ஆகவே, மருத்துவத் துறை நிபுணர்கள், உயிரிழந்ததாக கூறப்படும் நோயாளி கொரோனா தடுப்பூசி பெற்றிருந்தாரா அவருக்கு வேறு ஏதாவது உடல் நல பிரச்சினைகள் இருந்தனவா, அவர் உயிரிழப்பதற்கு கொரோனா முதன்மைக் காரணமாக இருந்ததா என்பது போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.
பேராசிரியர் Karol Sikora, அந்த நோயாளி பூஸ்டர் டோஸ் பெற்றிருந்தாரா, அவர் வயது முதிர்ந்தவரா என்று கேட்கிறார்.
ஒருவேளை வயது முதிர்ந்த ஒருவர், கொரோனா இருப்பதாக கண்டறியப்பட்டவர், தூக்கத்திலோ அல்லது மாரடைப்பாலோ கூட இறந்திருக்கலாமே என நான் சந்தேகிக்கிறேன் என்கிறார் அவர்.
தேவையில்லாமல் இந்த அரசு, ஒருவர் Omicron கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துவிட்டதாக கூறி மக்களை அச்சுறுத்துகிறது என்கிறார் பேராசிரியர் Karol Sikora.
இது குறித்து பதிலளித்துள்ள பிரதமர் தரப்பு செய்தித்தொடர்பாளர், தனிப்பட்ட நபர் மரணம் குறித்த விடயங்கள் இரகசியமானவை (confidential). ஆனாலும், வரும் வார இறுதியில் சில தகவல்கள் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.