தூக்கணாங்குருவி எப்படி கூடு கட்டுகிறது ?
பறவைகளின் கூடுகளிலே அழகியல் திறனோடு அமைக்கப்படுவது தூக்கணாங்குருவிக் கூடு ஒன்றுதான்.
நூற்றுக்கணக்காண வைக்கோல், நீளமான புல்கள், தென்னை நார்கள், ஈரக்களிமண், மாட்டுச்சாணம், மின்மினிப்பூச்சி இவைகளால் சுமார் 3 வாரங்களாக முழு மூச்சுடன் இந்த கூடுகளை தூக்கணாங்குருவிகள் நெய்கின்றன.
அதில் ஆண்பறவை தான் கூடு கட்டும். காய்ந்த புல், வைக்கோல் , நீண்ட இலைகள் போன்றவற்றை சேகரித்து வந்து கூடு கட்டும். இவற்றை இணைப்பதற்கு ஈரக்களிமண் , உலர்ந்த மாட்டுச்சாணி ஆகியவற்றை கொண்டு வந்து , வீடு கட்ட மனிதன் சிமிண்டு அல்லது சுண்ணாம்பு கலவையை பயன்படுத்துவது போல் அவற்றை பசையாக்கி புல், வைக்கோல் , இலைகள் ஆகியவற்றை இணைத்து வலுவான உறுதியான கூட்டினை கட்டுகிறது.
இதன் கூடானது தலைகீழாகத்தொங்கும் சுரைக்காய் போன்று இருக்கும். இந்தக்கூட்டின் நீண்ட பகுதியை தனது பெண்துணை உறுதியான பின்னரே ஆண்குருவி கட்டுகிறது. அதுவரை கூட்டின் கூண்டுப்பகுதி மட்டுமே இருக்கும்.
இப்பகுதியை கட்டி முடித்த பின்னர் தனது பெண் துணையை கூட்டி வந்து காட்டும்.கூட்டின் உட்பகுதி பெண்குருவிக்கு பிடிக்கவில்லை என்றால் பெண்குருவி ஆண்குருவியை விட்டு பிரிந்து விடும்.
ஆண் குருவி வேறு பெண் குருவியை தேடிச் செல்லும்.அல்லது கூட்டைச் சிறிது மாற்றியமைத்து மீண்டும் பழைய பெண் குருவியை கூட்டி வந்து காட்டும். இவ்வாறு பெண் குருவியின் இரசனைக்கேற்ப கூடு கட்டிய பின்னர் அதை பெண் குருவியும் ஏற்றுக்கொண்ட பின் , கூட்டின் நீண்ட பகுதியை ஆண் குருவி கட்டத்தொடங்கும். நார்களை , இலைகளை தன் அலகினால் நேராக கிழித்து அவற்றைப்பின்னி கூட்டினை கட்டும்.
இந்த அற்புதமான கூட்டினை கட்டி முடிப்பதற்கு பதினெட்டு நாட்களை எடுத்துக்கொள்கிறது. கூடு கட்டியாகி விட்டது. அந்த கூட்டிற்கு ஒளியேற்ற … மின்மினிப் பூச்சியை பிடித்து வந்து , கூட்டில் வைத்துள்ள ஈரக்களிமண்ணில் அதைப் பதித்து வைத்து கூட்டுக்குள் ஒளியேற்றிக் கொள்கிறது.
பெண் குருவி ஒரு பருவத்திற்கு மூன்று அல்லது நான்கு முட்டைகளை இடும். இந்த முட்டைகள் கூண்டுப் பகுதியில் பாதுகாப்பாக வைக்கப்படும். காற்று வீசும் திசையை நன்கு கணித்து அதற்கேற்ப கூண்டின் குடுவைப்பகுதியும் , நீண்ட பகுதியும் அமைக்கப்படும்.
காற்று எவ்வளவு வேகமாக அடித்தாலும் முட்டைகள் குடுவைப்பகுதிக்குள்ளேயே இருக்கும் படி நீண்ட பகுதி பின்னப்பட்டிருக்கும். மேலும் கூட்டின் மீது காற்றின் தாக்கம் இல்லாத மரக்கிளைகளில் இவை கூடு கட்டும். குடுவை போன்ற பகுதியை கட்ட எட்டு நாட்களும் நீண்ட பகுதியை கட்ட பத்து நாட்களும் எடுத்துக்கொள்ளும்.
கூடு கட்டும் பொருட்களைச் சேகரிப்பதற்காக இந்த தூக்கணாங்குருவிகள் சுமார் 500 முறை பறந்து செல்கின்றன. கூட்டைக்கட்ட சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட பதர்களையும் மற்றவைகளையும் சேகரிக்கின்றன. பெண் குருவி பதினைந்து நாட்கள் அடைகாக்கும். குஞ்சுகள் இறக்கை முளைத்து பறந்து சென்ற பின் ஆண்குருவி வேறுகூட்டை கட்ட ஆரம்பிக்கும்.