சீனா, பாகிஸ்தானுக்கு சிம்ம சொப்பனமாக மாறும் இந்திய விமானப் படை!
தெற்காசியாவில் இந்தியா தனது வான் ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நோக்கி தீவிரமாக களமிறங்கியுள்ளது.
இந்தியா தன்னுடைய ராணுவ எல்லை பகுதிகளை சீனா மற்றும் பாகிஸ்தான் உடன் பகிர்ந்து இருப்பதால் இந்த வான் பாதுகாப்பு வலுப்படுத்தல் என்பது அவசியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது.
சமீபத்தில் நடந்த “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையில் நடந்த தீவிரமான வான் மோதல்கள் இந்திய இராணுவத்தின் வலுவான வான் மேலாதிக்கத்திற்கான தீவிரமான தேவையை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவின் உள்நாட்டு ஏவுகணை திட்டம்
இந்திய பிராந்தியத்தை சுற்றி அதிகரித்து வரும் பதற்றங்களை எதிர்கொள்ள இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு(DRPO) உள்நாட்டு ஏவுகணை மேம்பாடு மற்றும் உற்பத்தியை தீவிரப்படுத்தி வருகிறது.
உள்நாட்டு ஏவுகணையான காண்டீவ் என்ற அஸ்திரா - 3(Astra MK - 3) ஏவுகணையில் DRPO பணியாற்றி வருகிறது.
இது சீனாவின் PL-15 ஏவுகணை விட அதிக திறன் மற்றும் தாக்குதல் வரம்பை (340 கிலோ மீட்டர்) கொண்டதாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.
அணு ஆயுதங்களை கொண்டுள்ள இரு நாடுகளுக்கு இடையே இந்தியா அமைந்திருப்பது இராணுவ ஆயுத மேம்படுத்துதலின் முக்கிய தேவையாக பார்க்கப்படுகிறது.
சக்தி வாய்ந்த ஏவுகணை கொள்முதல்
உள்நாட்டு ஏவுகணை திட்டம் தீவிரப்படுத்தப்படும் அதே நேரத்தில், இந்தியா அதிநவீன சர்வதேச ஏவுகணைகளை கொள்முதல் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

மீட்டியோர் ஏவுகணை கொள்முதல்
இந்திய விமானப்படையின் சக்தியை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 1500 கோடி மதிப்பில் மீட்டியோர் ஏவுகணைகளை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய விமானப்படையில்(IAF) முன்னணி போர் விமானமாக உள்ள ரபேல் போர் விமானங்களின் போர் திறனை அதிகப்படுத்தும் நோக்கில் ரூ. 1500 கோடி மதிப்பில் மீட்டியோர்(Meteor) ஏவுகணைகளை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
ஐரோப்பாவின் MBDA நிறுவனத்தால் தயாரிக்கப்படும் இந்த மீட்டியோர் ஏவுகணை சுமார் 200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.

ரஷ்யாவின் R-37 ஏவுகணை
இதற்கிடையில் இந்திய விமானப்படையின் முன்னாள் விமானி விஜயேந்திர தாக்கூர், இந்திய விமானப் படைக்கு வலு சேர்க்கும் விதமாக ரஷ்யாவின் R-37 ஏவுகணையை இந்தியா வாங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த R-37 ஏவுகணை 300 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது.
ரஷ்யாவும் இந்த ஏவுகணைகளை இந்தியாவுக்கு வழங்கவும், கூட்டாக தயாரிக்கவும் முன்வந்துள்ளது.
இந்த அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் இந்திய விமானப் படை அதிநவீன பாதுகாப்பு அரண் கொண்ட சக்தியாக உருவாகி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |