பிரித்தானியாவில் இந்திய வம்சாவளி நபரின் உணவகத்தில் திருட்டு: குற்றவாளியை தேடிச் சென்ற உரிமையாளர்!
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு சொந்தமான உணவகம் ஒன்றில் உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், அதன் உரிமையாளரே குற்றவாளிகளை தேடிச் சென்றுள்ளார்.
உடைக்கப்பட்ட கடை
பிரித்தானியாவின் சவுத்தாம்ப்டனில் இந்திய வம்சாவளி நபருக்கு சொந்தமான பதாரோ உணவகம் சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த திருட்டு சம்பவத்தின் போது மர்ம நபர் உணவகத்தின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே நுழைந்து பணம் மற்றும் விலையுயர்ந்த மது பாட்டில்களை திருடிச் சென்றனர்.
கடை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் அங்கித் வகேலா, உடனடியாக அவசர உதவி எண் 999க்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இருப்பினும் அதிகாரிகள், திருட்டு சம்பவத்தை வந்து ஆராய 3 முதல் 4 நாட்கள் வரை ஆகும் என்றும், தடயவியல் நிபுணர்களால் உடனடியாக வர முடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடையின் சிசிடிவி காட்சிகளை மின்னஞ்சலில் அனுப்பும் படியும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புலன் விசராணையை தொடங்கிய கடையின் உரிமையாளர்
பொலிஸாரின் வருகைக்காக காத்திருக்க வேண்டாம் என்று முடிவெடுத்த உரிமையாளர் அங்கித் வகேலா, தனது சொந்த தேடலை நடத்தியுள்ளார்.
இறுதியில் கடைக்கு அருகில் உள்ள தெருவில் திருடப்பட்ட மதுப்பாட்டில்கள் சிதறியும், பணப்பெட்டி உடைக்கப்பட்டு கிடப்பதையும் கண்டுபிடித்துள்ளார்.
மீண்டும் உணவகத்தை திறந்த அங்கித் வகேலா
இழப்புகளுக்கு சிறிதும் கவலை படாத அங்கித் வகேலா, சேதமடைந்த அனைத்தையும் சரி செய்து மீண்டும் தனது வாடிக்கையாளர்கள் மீது நம்பிக்கை வைத்து தங்களது சிறந்த சேவையை மீண்டும் தொடங்கியுள்ளார்..
புதுப்பிக்கப்பட்ட பதாரோ உணவகம் இந்த மாத இறுதியில் தனது நான்காம் ஆண்டை கொண்டாட இருப்பது குறிப்பிடத்தக்கது.
பதாரோ உணவகத்தில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பில் ஹாம்ப்ஷயர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |