இந்த வாரத்தில் சுவிட்சர்லாந்தில் கொரோனா நிலைமை எப்படி உள்ளது?
உக்ரைன் போர் முதலான விடயங்களால், கொரோனா குறித்து மக்கள் பேசுவது கொஞ்சம் குறைந்திருந்தாலும், கொரோனா என்னவோ பெரிய அளவில் குறைந்ததாக தெரியவில்லை.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை இந்த வாரத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, என எல்லாமே அதிகமாகத்தான் இருந்திருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் இந்த வாரம் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளோரின் எண்ணிக்கை 184,055. இது கடந்த வார்த்தை ஒப்பிடும்போது 8 சதவிகிதம் அதிகம். கடந்த வாரம் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 171,085.
அத்துடன், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இந்த வாரத்தில் அதிகரித்துள்ளது. சென்ற வாரத்தில் 482ஆக இருந்த இந்த எண்ணிக்கை, 17 சதவிகிதம் அதிகரித்து, இந்த வாரம் 563 ஆகியுள்ளது.
அதேபோல, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் சென்ற வாரம் 42 ஆக இருந்தது, இந்த வாரம் 55 ஆக உயர்ந்துள்ளது.
மக்கள் சகஜ வாழ்க்கைக்குத் திரும்புவதால், அதாவது கொரோனா விதிகளை பின்பற்றுவதைக் கைவிடுவதால், கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சில நிபுணர்கள் கருதுகிறார்கள்.
தொற்றுநோயியல் நிபுணரான Marcel Salathé, நிலைமை கவலையளிப்பதாக உள்ளதாகவும், பொதுப்போக்குவரத்தில் மாஸ்க் அணிதல், தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகளை சீக்கிரத்தில் கைவிடுவது குறித்து கவனமாக இருக்கவேண்டும் என்றும் கூறுகிறார்.
பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிடவில்லை என்று கூறும் அவர், தடுப்பூசி மற்றும் மக்களுக்கு உருவாகியுள்ள நோயெதிர்ப்பு சக்தி காரணமாக கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், மரணங்களும் சற்று குறைவாக இருப்பதாக தெரிவிக்கிறார். ஆனாலும், கொரோனாவால் உயிரிழக்கும் அபாயம் மாறவில்லை என்றும், இருந்தாலும், அது ப்ளூ காய்ச்சலுக்கு பலியாகுவோரின் எண்ணிக்கையை விட குறைவாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், இந்த நிலை மோசமாகலாம் என தான் கருதுவதாக தெரிவிக்கும் Marcel Salathé, கொரோனா காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், மரணங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்.
நீண்ட கால கோவிடையும், கோவிடுக்கும் இதய நோய்களுக்கும் உள்ள தொடர்பையும் சுட்டிக்காட்டுகிறார் அவர்.
இந்த காரணங்களுக்காகவே, அரசு மீதமுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மார்ச் மாதத்திற்குப் பிறகும் நீட்டிக்கவேண்டும் என தான் எண்ணுவதாக தெரிவிக்கும் அவர், கோடைக்குப் பிறகு மீண்டும் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் என்றும், ஆகவே, நான்காவது டோஸ் தடுப்பூசி பயனளிக்கலாம் என்று தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.